
சென்னை: டங்க்ஸ்டன், அணுக்கனிமங்கள் உள்ளிட்ட 30 வகை கனிமச் சுரங்கம் அமைக்க மக்கள் கருத்து தேவையில்லை என்பது தவறு என்றும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த சுரங்கங்களையும் அமைக்கக் கூடாது என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் டங்ஸ்டன், தாமிரம், நிக்கல், பிளாட்டினம் உள்ளிட்ட 24 வகையான முக்கியக் கனிமங்களையும், தோரியம், யுரேனியம், மோனசைட் உள்ளிட்ட 6 வகையான அணுக் கனிமங்களையும் தோண்டி எடுப்பதற்கான சுரங்கங்களை அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டங்களை நடத்தத் தேவையில்லை என்றும், இவற்றுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை இனி மத்திய அரசே வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொது மக்களின் பாதுகாப்புக்கும், வாழ்வாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.