
கேரள நடிகர் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists)-வின் முதல் பெண் தலைவராகக் கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகை ஸ்வேதா மேனன் தேர்வு செய்யப்பட்டார்.
கேரள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார். பல்வேறு சர்ச்சைகளையும், கடுமையான எதிர்ப்புகளையும் மீறி, அவர் நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.
இந்நிலையில் ‘India Today’-விற்கு ஸ்வேதா மேனன் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.
அதில் பேசியிருக்கும் அவர், “நான் கர்ப்பமாக இருந்தபோது 4 படங்களில் நடித்துள்ளேன். அதிகாலையில் எழுந்து படப்பிடிப்புக்குச் செல்வது கடினமாக இருக்கும்.
அதனை நான் இயக்குநர்களிடமும் சொன்னேன். அவர்களும் புரிந்துகொண்டார்கள்.
ஆனால் சிலர் இதுபோன்ற விஷயங்களை வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். நான் பதவியேற்ற முதல் நாளே பெண் நடிகைகளிடம் உங்களுக்கு எந்தப் பிரச்னை இருந்தாலும் தைரியமாகச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.

திரைப்படத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்க வேண்டும். பணிபுரியும் தாய்மார்களுக்குப் படப்பிடிப்பு தளங்களில் வேலை நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து மாடலிங் துறையைத் தேர்ந்தெடுத்தது குறித்து பேசிய ஸ்வேதா மேனன், “ஒருமுறை கோயம்புத்தூரில் இருந்து அழகி போட்டி ஒன்றில் கலந்துகொள்வதற்காகக் கடிதம் வந்திருந்தது. அப்பாவைக் கேட்காமல் நான் விண்ணப்பித்துவிட்டேன்.
அதில் அவருக்கு மகிழ்ச்சி இல்லை. இருந்தாலும் அவர் என்னை அந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்காக கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்றார். அந்தப் போட்டியில் நான் ரன்னர்- அப் ஆனேன். எனது புகைப்படங்கள் கேரள செய்தித்தாளில் வெளிவந்தன.

தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்றேன். 1994ஆம் ஆண்டு நடைபெற்ற அழகிப்போட்டியிலும் கலந்துகொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் நான் ஐஸ்வர்யா ராயுடன் தங்கி இருந்தேன். அந்தப் போட்டியில் சுஷ்மிதா சென்தான் கிரீடத்தை வென்றார்” என்று பகிர்ந்திருக்கிறார்.