
கனிம வளம்:
இந்தியாவில் காணப்படும் 24 வகையான முக்கியக் கனிமங்களையும் (critical and strategic minerals), 6 வகையான அணுக் கனிமங்களையும் (atomic minerals) அகழ்ந்தெடுக்கும் பணிகளைப் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமலே மேற்கொள்ளலாம் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 4-ம் தேதி மத்தியப் பாதுகாப்பு அமைச்சகம் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதியது. அதில், “இந்தியாவின் பாதுகாப்புத் துறை வாகனங்கள், கண்காணிப்பு (Radar) வழிகாட்டிக் கருவிகள் (Sonar), தொலைத் தொடர்புக் கருவிகளை உருவாக்க வேண்டும்.
இதற்கு அரிய வகை கனிமங்கள் அதிகம் தேவைப்படுகின்றன. எனவே, முக்கியக் கனிமங்கள் மற்றும் அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டங்களைத் தேசப் பாதுகாப்பு முக்கியத்துவம் கொண்ட திட்டங்களாகக் கருதி, அவற்றுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் நடைமுறையிலிருந்து விலக்களிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டது.
ஆகஸ்ட் 29-ம் தேதி மத்திய அணுசக்தித் துறை, சுற்றுச்சூழல் துறைக்கு ஒரு கடிதம் எழுதியது. அதில், “மூன்றாம் நிலை அணுமின் உற்பத்திக்குத் தேவையான தோரியம் எரிபொருளைக் கொண்டிருக்கும் மோனசைட், முதல் நிலை அணுமின் உற்பத்தியில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் யுரேனியம் காணப்படும் கடற்கரைத் தாது மணலை அகழ்ந்தெடுக்கும் திட்டங்களுக்குப் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவதிலிருந்து விலக்களிக்க வேண்டும்” எனக் கேட்டிருக்கிறது.
மத்திய அரசின் அறிவிப்பு:
இந்த இரண்டு கோரிக்கைகளையும் பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்,“சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் முக்கியக் கனிமங்களாகவும் அணுக் கனிமங்களாகவும் வகைப்படுத்தப்பட்ட கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் தேவையில்லை” என அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தேசிய பாதுகாப்புத் தேவைகள் மற்றும் மூலோபாய பரிசீலனைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அணுசக்தித் துறை கோரிக்கை வைத்திருக்கிறது.
Mines and Minerals (Development and Regulation) Act of 1957 சட்டத்தின் முதல் அட்டவணையின் பகுதி பகுதி B-யில் அறிவிக்கப்பட்ட அணு கனிமங்கள், பகுதி D-யில் அறிவிக்கப்பட்ட முக்கியமான மற்றும் மூலோபாய கனிமங்களின் அனைத்து சுரங்கத் திட்டங்களும் பொது ஆலோசனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.” என அறிவித்திருக்கிறது.
மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் இந்த அறிவிப்புக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
மாநில அரசின் உரிமையைப் பறிப்பு:
இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வெற்றிச் செல்வன், “இந்தியாவில் காணப்படும் 24 வகையான முக்கியக் கனிமங்களையும் (critical and strategic minerals), 6 வகையான அணுக் கனிமங்களையும் (atomic minerals) அகழ்ந்தெடுக்கும் பணிகளைப் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமலே மேற்கொள்ளலாம் என ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்திய மக்களை கதிர்வீச்சு அபாயத்தில் தள்ளும் இம்முடிவை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். முக்கியமானக் கனிமங்களைக் கண்டுபிடித்து, அகழ்ந்தெடுத்து, பதனிட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது அனைத்தும் ஒன்றிய அரசின் முக்கியமானக் கனிமங்கள் இயக்கத்தின் (Critical Mineral Mission) நோக்கங்களாக உள்ளன.
இந்தியா 2070-ம் ஆண்டுக்கு முன்னர் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைய சூரிய உற்பத்தி, காற்றாலை உற்பத்தி, மின்சார வாகனங்கள், மின்கல அமைப்புகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு இக்கனிமங்களை வேகமாக அகழ்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டியதாக ஒன்றிய அரசு கூறுகிறது.
இதுவரை 48 கனிமத் தொகுதிகள் ஏலத்திற்குக் கொண்டு வரப்பட்டு அதில் 24 நிறுவனங்களுக்குக் கனிமத் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இனி இந்தக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி பெறும் நடைமுறையில் ஒரு பகுதியாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்படாது.
மேலும் அகழ்ந்தெடுக்கப்படும் நிலப்பரப்பு சிறிய பகுதியாக இருந்தாலும் இத்திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கான பரிசீலனையை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம்தான் மேற்கொள்ளும் என அறிவித்துள்ளது. இது கனிமங்கள் மீதான மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாகும்.
கதிரியக்க அபாயம் அதிகரிக்கும்:
ஏற்கெனவே 24 வகையான கனிமங்களை ஏலம் விடும் உரிமை ஒன்றிய அரசிடம்தான் உள்ளது. ஆகவே கனிமத் தொகுதிகளை ஒன்றிய அரசே ஏலம் விடும், அதில் மாநில அரசு தலையிட முடியாது, பொதுமக்கள் கருத்தும் கேட்கப்படாது, சுற்றுச்சூழல் அனுமதியினையும் ஒன்றிய அரசே வழங்கும் என்றாகிவிட்டது.
இது மிகவும் ஆபத்தான போக்காகும். கனிமங்களை அகழ்ந்தெடுக்கப் பயன்படுத்தப்படும் சுரங்க நடைமுறை மற்றும் கடற்கரை தாது மணலிலிருந்து கனிமங்களைப் பிரித்தெடுக்கும் பணிகள் மிகுந்த சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பணிகளாகும்.
இப்பணிகளால் சுற்றுச்சூழல் நாசமாகும். கடலரிப்பு மேலும் தீவிரமடையும். வாழ்விடப் பாதிப்புகள் அதிகரிக்கும். கனிமங்களை அகழ்ந்தெடுக்கும்போது எழும் கதிரியக்க அபாயத்தால் நோய்கள் பல்கிப் பெருகும்.” எனத் தெரிவித்திருக்கிறார்.
கொள்ளை லாபம்:
பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜனிடம் பேசியபோது, “ ஏற்கெனவே கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும், கேரளாவின் கொல்லம், ஆலப்புழா மாவட்டங்களிலும் வி. வி. மினரல் போன்ற தனியார் நிறுவனங்களும், கேரளா மினரல்ஸ் மற்றும் மெட்டல்ஸ் நிறுவனமும் (KMML), இந்திய அரியவகை மணல் நிறுவனமும் (IRE) கார்னெட், ரூட்டைல், சிர்கான், லூக்கொக்சின், சிலிமனைட், இல்மனைட், மோனோசைட் போன்ற கனிம வளங்களை அள்ளித்தோண்டி விற்று, கொள்ளை லாபம் அடைந்தன.
இவற்றால் பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளம். கன்னியாகுமரியில் இயங்கிவரும் ஐ.ஆர்.இ.எல். நிறுவனம் (indian Rare Earths Limited) கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனையம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் அணுக் கனிம சுரங்கங்களை அமைக்கத் திட்டமிட்டிருந்தது.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி:
இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதிகோரி ஏற்னெவே விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் 1.10.2024 அன்று இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் இக்கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், தற்போது கருத்துக் கேட்புக் கூட்டம் அவசியமில்லை என ஒன்றிய அரசு அறிவித்துவிட்டதால் இத்திட்டம் செயல்பட எவ்விதத் தடையுமில்லாமல் போய்விட்டது.
மேலும் சுற்றுச்சூழலிலும், பொதுமக்கள் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவல்ல இம்முடிவை ஒன்றிய அரசு வெறும் அலுவல் உத்தரவு (office memorandum) வாயிலாக வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இம்முடிவை எடுப்பதற்கான சட்டத் திருத்தங்களை மேற்கொண்டால் நாடாளுமன்ற நடைமுறை, பொதுமக்கள் கருத்துக் கேட்பு உள்ளிட்டவற்றைப் பின்பற்ற வேண்டியிருக்கும் என்பதால் சட்டத்திற்குப் புறம்பாக அலுவல் உத்தரவாக இம்முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் கனிம வளத்தைத் தனியாருக்குத் தாரை வார்த்து அணுக் கனிமங்கள் உள்ளிட்ட கனிமங்களை அமெரிக்காவுக்கு அனுப்பும் தனது திட்டத்திற்கு இடையூறாக மாநில அரசுகளோ, பொதுமக்களோ வந்துவிடக் கூடாதெனும் நோக்கத்தோடு இவ்வுத்தரவை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.

மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய சுற்றுச்சூழல் துறையின் இந்த அலுவல் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக நீதிமன்றத்தை நாட வேண்டும் எனக் கோருகிறோம். பேரழிவை உண்டாக்கும் திட்டங்கள் மீது பொதுமக்கள் முடிவை உறுதி செய்யும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை ரத்து செய்யும் இவ்வுத்தரவு மிகவும் அபாயகரமானது.
ஒன்றிய அரசு இம்முடிவை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் இயக்கங்களும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் எனப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் வலியுறுத்துகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.