
மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பதவியில் இருக்கும் ஆளுநர்கள் மாநில அமைச்சரவை அனுப்பும் மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் மனுத்தாக்கல் செய்துள்ளன.
மாநில அமைச்சரவை அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் நீண்ட நாட்களுக்கு ஆளுநர்கள் ஒத்தி வைத்துவிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இம்மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
ஏற்கெனவே இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆளுநர்கள் மாநில அரசு அனுப்பும் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்கக்கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
மத்திய அரசு வாதம்
இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா,”ஒரு மசோதாவை காலவரையின்றி ஆளுநர்கள் நிறுத்தி வைக்க முடியாது என்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில கருத்தை ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால், ஒரு சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதா அல்லது மறுப்பதா, அதை சட்டமன்றத்திற்கு பரிந்துரைகளுடன் திருப்பி அனுப்புவதா அல்லது ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்புவதா என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்டம் ஆளுநர்களுக்கு வழங்கியுள்ளது.
நாடாளுமன்றத்தை மீறி, ஆளுநரின் அதிகாரங்கள் தொடர்பான அரசியலமைப்பு விதிகளைத் திருத்த நீதிமன்றத்தை வற்புறுத்துவது தவறான முயற்சியாகும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 368 இன் கீழ் பாராளுமன்றம் இயற்றியதைத் திருத்தம் செய்யலாம் என்றாலும், நீதித்துறையின் பங்கு இதில் கருத்து தெரிவிப்பது மட்டுமேயாகும்.
`சுப்ரீம் கோர்ட் ஹெட்மாஸ்டர் கிடையாது’
மாநில அரசும், ஆளுநரும் இணைந்து கலந்து ஆலோசித்து செயல்பட வேண்டும் என்ற கேரளா அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்கிறோம்.
மாநிலங்களால் எழுப்பப்படும் ஒவ்வொரு பிரச்னையையும் தீர்க்க, சுப்ரீம் கோர்ட் அரசியலில் ஹெட்மாஸ்டர் கிடையாது.
பிரதமர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆளுநர் அல்லது ஜனாதிபதியுடன் கலந்து ஆலோசித்துதான் தீர்க்க முடியும். இதுதான் இந்திய அரசியலில் நடைமுறையாக இருந்து வருகிறது.

இதன் மூலம் இந்திய ஜனநாயகமும் வளர்ந்துள்ளது. அரசியலமைப்பு விதிகள், சுப்ரீம் கோர்ட் கருத்துகள் பின்பற்றப்பட்டுள்ளன.
1970 முதல், மாநில ஆளுநர்கள் 17,150 மசோதாக்களை மத்திய அரசுக்கு அனுப்பி இருக்கின்றனர். அவற்றில் 20 மசோதாக்கள் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தனக்கு வந்த மசோதாக்களில் 94 சதவீத மசோதாவிற்கு ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் கொடுத்து இருக்கிறார். 623 மசோதாக்களுக்கு மூன்று மாதத்திற்குள் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.