
பா.ம.க-வில் கடந்த சில மாதங்களாகவே தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்குமிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு தரப்புமே தாங்கள்தான் கட்சித் தலைவர் எனச் சொல்லி வருகின்றன.
இதனால் அங்கு பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தொண்டர்களிடம் உரையாடி வருகிறார்.
`திட்டம் இருக்கிறது’
அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராம்தாஸ் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர் அம்பானி.
அவருடைய பேரன் பேத்திக்கு கிடைக்கக்கூடிய கல்வியும், வாய்ப்பும் கிராமத்தில் இருக்கும் ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும் என நினைக்கிறேன்.
அதற்கான திட்டங்களையும் வைத்திருக்கிறேன். நான் எந்தப் பதவியையும் விரும்பவுமில்லை. அதை நோக்கிச் செல்லவுமில்லை.
`குடியரசுத் தலைவராகியிருக்கலாம்’
நான் நினைத்திருந்தால் குடியரசுத் தலைவராகக் கூட ஆகியிருக்க முடியும். இப்போதுகூட துணைக் குடியரசுத் தலைவர் ஒரு தமிழர் தானே.
குடியரசுத் தலைவராக இருந்த எல்லோரும் என் நண்பர்கள்தான். நமது பிரதமர் மோடிகூட என்னை சந்தித்தால் கட்டி அணைத்துக்கொள்வார்.
நான் நினைத்திருந்தால் வேண்டிய பதவிக்குச் சென்றிருக்க முடியும். ஆனால் அது எதுவும் எனக்கு வேண்டாம். என் மக்கள் நலனே, தமிழ்நாட்டு மக்கள் நலனே முக்கியம்.

`பதவியை விரும்பவில்லை’
அதனால், யாரெல்லாம் மக்களுக்காகப் பேசுவார்களோ அவர்களையெல்லாம் எம்.எல்.ஏ-வாக சட்டமன்றத்துக்கு அனுப்பி அழகு பார்த்தேன்.
சபாநாயகர் சொன்னால் கூட நமது ஜி.கே மணி கேட்கமாட்டார். தொடர்ந்து மக்களுக்காகப் பேசிக்கொண்டே இருப்பார்.
உங்களுக்காக நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம். வாழ்நாள் முழுவதும் எந்த பதவிக்கும் செல்ல மாட்டேன் என சத்தியம் செய்து அதைக் கடைப்பிடித்து வாழ்ந்து வருகிறேன்.” என்றார்.