• September 11, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: என் குழந்தைக்கு 8 வயதாகிறது. அடிக்கடி காய்ச்சல், சளி, இருமல் என பாதிக்கப்படுகிறாள். அவளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே இல்லையோ என்று தோன்றுகிறது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்… எப்படிப்பட்ட உணவுகள் கொடுக்கலாம்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

சரிவிகித உணவு

குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே பேலன்ஸ்டு டயட் எனப்படும் சரிவிகித உணவுப்பழக்கத்தை அறிமுகம் செய்துவிட்டால், அப்போதிலிருந்தே நோய் எதிர்ப்பு சக்தி சீராக இருக்கும்.

ஓர் உணவில் எல்லாவிதமான ஊட்டச்சத்துகளும் இருக்க வேண்டும், சரியான அளவில் இருக்க வேண்டும். அதுதான் சரிவிகித உணவு.

அந்த வகையில் பிரதானமாக இடம்பெற வேண்டியவை முழுத்தானியங்கள், சிறுதானியங்கள் போன்றவை.

காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என எல்லாவற்றிலும் முழுத்தானியங்கள் இருக்க வேண்டும். அவற்றில் நார்ச்சத்தும் ஓரளவு இருக்கும். இது குடல் ஆரோக்கியத்துக்கும் ஏற்றதாக இருக்கும். 

புரதச்சத்து

அடுத்தது, குழந்தைகளின் உணவில் புரதச்சத்து நிறைய இருக்க வேண்டும். புரதச்சத்துதான், உடலின் நோய் எதிர்ப்புக்கான செல்களை வளர்க்க உதவும். 

சிக்கன், மீன், முட்டை என அசைவ உணவுகளிலும், பால், பால் பொருள்கள், பருப்புகள் போன்ற சைவ உணவுகளிலும் புரதச்சத்து அதிகமிருக்கும். 

அடுத்தது குழந்தைகளுக்கு நிறைய காய்கறிகள், பழங்கள் கொடுத்துப் பழக்க வேண்டும். அவற்றிலிருந்துதான் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் கிடைக்கும்.

ஆரஞ்சு, பப்பாளி, கொய்யா, கேரட், புரொக்கோலி போன்றவற்றை அதிகம் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு நிறைய காய்கறிகள், பழங்கள் கொடுத்துப் பழக்க வேண்டும். அவற்றிலிருந்துதான் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் கிடைக்கும்.

தேவையான சத்துகள்

தினமும் குறிப்பிட்ட அளவு பால் குடிக்க வேண்டும். அது வைட்டமின் டி மற்றும் கால்சியம்  தேவைக்கு உதவும்.

நட்ஸ், சீட்ஸ் போன்றவற்றில் வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்பு, துத்தநாகச் சத்து போன்றவை உள்ளதால் அவற்றையும் சிறு வயதிலிருந்தே கொடுத்துப் பழக்க வேண்டும். 

இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி உணவுகளான இஞ்சி, மஞ்சள், துளசி போன்றவற்றை சமையலில் சேர்க்கலாம். குடல் ஆரோக்கியம் சீராக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருக்கும்.

அதற்கு பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும். அடிக்கடி வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

புரோபயாடிக் உள்ள யோகர்ட் போன்றவற்றையும் குழந்தைகளுக்குக் கொடுக்கவும்.

வெறும் உணவுகளால் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாக ஏற்படுத்திவிட முடியாது. 

நல்ல தூக்கம், தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி போன்றவற்றையும் முறைப்படுத்துங்கள்.

இன்னும் சொல்லப் போனால், அடிக்கடி இன்ஃபெக்ஷன் ஏற்படாமலிருக்க சுகாதாரம் குறித்தும்  கற்றுக் கொடுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *