
நேற்றைய தினம் (செப்டம்பர் 9) கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் ராணுவம் அத்துமீறி வான்வழி தாக்குதல் நடத்திய சூழலில், இன்று கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி (Sheikh Tamim bin Hamad Al Thani) உடன் அலைபேசியில் பேசியுள்ளார் பிரதமர் மோடி.
ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த முன்னறிவிப்பில்லாத தாக்குதலை அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்த தாக்குதல் முழுக்க முழுக்க நெதன்யாகுவின் முடிவால் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார். எனினும், இதில் ட்ரம்ப் இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்பட்டுள்ளார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த புவிசார் அரசியல் சூழலில் இந்தியா இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த பிரதமர் மோடியின் எக்ஸ் தள பதிவில், “கத்தாரின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி உடன் பேசினேன். தோஹாவில் நடந்த தாக்குதல்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தேன்.
சகோதரத்துவ நாடான கத்தாரின் இறையாண்மையை மீறும் செயலுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கிறது. மோதலைத் தவிர்த்து பேச்சுவார்த்தைகள் மற்றும் ராஜாந்திர நடவடிக்கைகள் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வுகாண இந்தியா ஆதரவளிக்கிறது.
Spoke with Amir of Qatar Sheikh Tamim Bin Hamad Al-Thani and expressed deep concern at the attacks in Doha. India condemns the violation of the sovereignty of the brotherly State of Qatar. We support resolution of issues through dialogue and diplomacy, and avoiding escalation.…
— Narendra Modi (@narendramodi) September 10, 2025
“இந்தியா, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்கு உறுதியாக ஆதரவளிக்கிறது. மேலும், அனைத்து வடிவங்களிலும் வெளிப்படும் தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியாக நிற்கிறது” எனக் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் சர்வதேச சட்டங்களை மீறும் இஸ்ரேலின் எந்தவொரு நடத்தையையும் கத்தார் பொருத்துக்கொள்ளாது எனக் கூறிய அந்த நாட்டு அரசு, மேலும்விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன் முடிவுகளை வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நட்புரீதியாக கத்தார் சென்றுள்ளார் அபுதாபியின் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆயுதப்படை உச்சத் தளபதியுமான ஷேக் முகமது பின் சயித் அல் நஹ்யான்.

மேலும், துபாய் இளவரசர் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் கத்தாருக்கு பயணம் செய்யவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இத்துடன், ஜோர்தான் மற்றும் சவூதி அரேபியாவின் இளவரசர்களும் கத்தார் பயணிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.