
மகாராஷ்டிரா மாநிலத்தில் வார்தா மற்றும் நாந்தேட் இடையேயான ரயில்வே திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது.
அப்போது யவத்மால் மாவட்டத்தில் உள்ள கார்ஷி என்ற கிராமத்தில் உள்ள கேசவ் ஷிண்டே என்ற விவசாயியின் நிலத்தைக் கையகப்படுத்தினர்.
அவரது நிலத்தில் பழம்பெரும் மரம் ஒன்று நின்றது. ரயில்வே ஊழியர்கள் நிலத்தை அளக்க வந்தபோது அதில் இருந்த ஆந்திராவைச் சேர்ந்த ஒரு ஊழியர் கேசவ் ஷிண்டேக்கு சொந்தமான நிலத்தில் நின்ற மரம் செம்மரம் என்று தெரிவித்தார்.
அதோடு அம்மரம் பல கோடி ரூபாய் மதிப்புடையது என்று தெரிவித்தார். இதனால் கேசவ் ஷிண்டே தனது நிலத்தில் உள்ள மரம் செம்மரம் என்று கூறி அதற்கு ரூ.5 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் ரயில்வே நிர்வாகம் தனது நிலத்திற்கு இழப்பீடு கொடுத்தது என்றும், நிலத்தில் இருந்த மரம் மற்றும் பூமிக்கு அடியில் இருந்த பைப்லைனுக்கு இழப்பீடு கொடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் கேசவ் ஷிண்டே நிலத்தில் நின்ற மரத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று ரயில்வேக்கு உத்தரவிட்டது.
அதில் ரூ.50 லட்சத்தை கேசவ் ஷிண்டே உடனே பெற்றுக்கொள்ளலாம் என்றும், எஞ்சிய தொகையை மரத்தின் மதிப்பை ஆய்வு செய்தபிறகு பெறலாம் என்று மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை உத்தரவிட்டிருந்தது.
அதேசமயம் ரயில்வே நிர்வாகம் அந்த மரம் செம்மரமா என்பது குறித்து ஆய்வு செய்ய அறிவியல் சோதனை செய்ய பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தை ரயில்வே நிர்வாகம் நியமித்தது.
அந்நிறுவனம் மரத்தை நேரில் ஆய்வு செய்து தனது அறிக்கையை ரயில்வேயிடம் தாக்கல் செய்துள்ளது. இதில் செம்மரம் என்று சொல்லப்பட்ட மரம் செம்மரம் கிடையாது என்று தெரிய வந்துள்ளது.

மேலும் அம்மரத்தின் மதிப்பு வெறும் ரூ.11 ஆயிரம் மதிப்புடையது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து ரயில்வே நிர்வாகம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது.
அதில் கேசவ் ஷிண்டே பெற்ற பணத்தை வட்டியோடு திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் கேசவ் ஷிண்டே தனது நிலத்தில் நிற்கும் மரம் செம்மரம் தான் என்று குறிப்பிட்டுள்ளார். இனி இவ்விவகாரத்தில் கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…