• September 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை, புது வண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி பேபி (74). இவரின் கணவர் ஜான்சன், துறைமுகத்தில் வேலை செய்து வந்தார். ஜான்சன் உயிரிழந்தநிலையில் பேபிக்கு மாதந்தோறும் பென்சன் பணம் கிடைத்து வருகிறது.

அந்தப் பணத்தை வங்கியிலிருந்து எடுக்கக் கடந்த 8-ம் தேதி பேபி ராயபுரம் எம்.எஸ்.கோவில் பகுதியில் உள்ள வங்கிக்குச் சென்றார். பின்னர் வங்கியிலிருந்து பென்ஷன் பணம் 17,500 ரூபாயை எடுத்த பேபி, அதை பையில் வைத்தார்.

வீட்டுக்குப் புறப்பட்ட பேபியிடம் வங்கியின் அருகே ஒருவர் வழிமறித்தார். அந்த நபர், பேபியிடம் என்னைத் தெரியவில்லையா எனக் கேட்டிருக்கிறார். அதற்கு பேபி, “கண் சரியாகத் தெரியவில்லை. அதனால்தான் உங்களை அடையாளம் காண முடியவில்லை. நீங்கள் யார்?” என்று அப்பாவியாக பேபி கேட்டிருக்கிறார்.

மூதாட்டி

அதற்கு அந்த நபர், “பரவாயில்லை ஆயா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்” எனக் கேட்டிருக்கிறார். அதற்கு பேபி, “கால்தான் வலிக்கிறது. நடக்க முடியவில்லை” எனக் கூற, “பக்கத்தில் எலும்பு டாக்டர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் சென்று காண்பித்தால் ஒரு ஆயில் கொடுக்கிறார். அதைக் காலில் தடவினால் வலி எல்லாம் சரியாகிவிடும்” என அந்த நபர் பேபியிடம் பாசமாகப் பேசியிருக்கிறார்.

இதையடுத்து மூதாட்டி பேபி, கால் வலி ஆயில் கிடைக்குமா எனக் கேட்க அந்த நபர், “நானே உங்களை டாக்டரிடம் அழைத்துச் செல்கிறேன்” எனக் கூறியதோடு, பேபியைத் தன்னுடைய பைக்கில் ஏறும்படி கூறியிருக்கிறார். அதோடு பேபி வைத்திருந்த கைப்பையையும் வாங்கியிருக்கிறார். அந்த நபர் அதற்கு பேபி, என்னால் பைக்கில் உட்கார முடியாது தம்பி எனக் கூற, அப்படியென்றால் நானே ஆயில் வாங்கிக் கொண்டு வருகிறேன் எனக் கூறி பேபியிடம் கைப்பையைத் திரும்பக் கொடுத்திருக்கிறார் அந்த நபர். பின்னர் அந்த நபர் அங்கிருந்து பைக்கில் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

கைது
கைது

ஆயில் கொண்டு வருவார் என்ற நம்பிக்கையில் அங்குக் காத்திருந்த பேபிக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. கைப்பையில் வைத்திருந்த 17,500 ரூபாய் மாயமாகியிருந்தது. அதைப் பார்த்த பேபி, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விவரத்தைக் கூறி கண்ணீர் விட்டிருக்கிறார். இதையடுத்து பேபிக்கு ஆறுதல் கூறியவர்கள், ராயபுரம் காவல் நிலையத்தில் பணத்தைக் காணவில்லை எனப் புகாரளிக்கும்படி ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.

இதையடுத்து பேபி, ராயபுரம் காவல் நிலையத்துக்குச் சென்று விவரத்தைக் கூறியிருக்கிறது. உடனடியாக ஆக்ஷனில் களமிறங்கிய ராயபுரம் போலீஸார், பேபி கூறிய தகவலின்படி அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர், பேபியிடம் பேசியபடி கைப்பையிலிருந்த பணத்தை நைசாக திருடும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்த மர்ம நபரை போலீஸார் தேடிப் பிடித்தனர்.

விசாரணையில் அவரின் பெயர் சிவக்குமார் (47), வடபழனி, ராகவன் காலனி 1வது தெருவைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. இதையடுத்து சிவக்குமாரிடமிருந்து 17,500 ரூபாயையும் குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய பைக்கையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பிறகு சிவக்குமாரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து ராயபுரம் போலீஸார் கூறுகையில், “கைது செய்யப்பட்ட சிவக்குமார் மீது ஒரு கொலை வழக்கு மற்றும், பூக்கடை, அசோக் நகர், வில்லிவாக்கம், வளசரவாக்கம், அபிராமபுரம் அம்பத்தூர், சிட்லபாக்கம், சங்கர் நகர், சேலையூர் ஆகிய காவல் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

திருட்டு
திருட்டு

இவர் மூதாட்டிகளை டார்க்கெட் செய்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்பி திருடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். திருடிய பணத்தில் ஆடம்பரமாக வாழும் சிவக்குமார், சில மாதங்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார். தற்போது மூதாட்டியிடம் பென்சன் பணத்தைத் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சிவக்குமாரைப் பொறுத்தவரை வங்கி, ஏடிஎம்-களில் பணம் எடுப்பவர்களைப் பின்தொடர்ந்து சென்று அவர்களின் கவனத்தைத் திசை திருப்பத் திருடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். தொடர்ந்து சிவக்குமாரிடம் விசாரித்து வருகிறோம். இந்த வழக்கில் சிவக்குமாரை சிசிடியில் பார்த்ததும் அடையாளம் கண்டு அவரைக் கைது செய்து விட்டோம்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *