• September 10, 2025
  • NewsEditor
  • 0

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மாதிரிவேளூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூங்குடி கிராமத்தில் 30 ஆண்டுகள் பழைமையான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. பூங்குடியைச் சுற்றியுள்ள பெரியத்தெரு, காலனித்தெரு, பள்ளிக்கூடத்தெரு, நடுத்தெரு, புதுத்தெரு பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளைச் சேர்ந்த மக்கள், இதன்மூலம் குடிநீர் பெற்று பயனடைகின்றனர்.

இந்த நிலையில், இந்த நீர்த்தேக்கத் தொட்டியானது சிதிலமடைந்து, விரிசல்கள் ஏற்பட்டு, அபாயகரமாக இருப்பது, மக்களுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த தொட்டியை ஒட்டியே அங்கன்வாடி மையமும் அமைந்திருப்பதால், அங்கு வரும் பிள்ளைகளின் பெற்றோர்கள் வலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அந்தப் பகுதி பொதுமக்கள், “இந்த நீர்த்தேக்கத் தொட்டிய கட்டி முப்பது வருசத்துக்கு மேல ஆயிடுச்சி. இப்ப நெறைய இடத்துல விரிசல் விட்டுருக்கு, எப்ப விழும்னு பயமாவே இருக்கு. நீர் கசியுது, இதனால எங்களுக்கு தண்ணி கம்மியா வருது. சுத்தம் பண்ணா இடிஞ்சு விழுந்துடும்னு பயத்துல சுத்தம் செய்யுறதே இல்ல. அத்தி பூத்தது போல எப்பவாச்சும் தான் சுத்தம் செய்யுறாங்க. இதுனால தண்ணி தூசியா வருது. சுத்தம் பண்ணாலும், கொஞ்ச நாள்தான் தண்ணி நல்லா வரும். இல்லாட்டி திரும்வும் தூசியா மங்களாத்தான் தண்ணி வரும்.

இதனால இந்த தண்ணிய யாருமே குடிக்கிறது இல்ல. எங்களுக்கெல்லாம் குடிநீர் கிடைக்கிறதே ரொம்ப கஷ்டமா இருக்கு. போர் போட்டு இருக்குறவங்க வீட்ல குடிக்க மட்டும் தண்ணி எடுத்துப்போம். நாங்களும் அஞ்சு வருசமாயும் இதத்தான் கோரிக்கையா வைக்கிறோம். ஆனா, இந்த தொட்டிய புதுசா கட்டியும் கொடுக்கல, எங்களுக்கு சுத்தமான குடிநீரும் கெடைக்கல… குடிக்கிற தண்ணிக்கே அடுத்த வீட்ட நம்பித்தான் இருக்கோம்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியவர்கள்,

“இந்த தொட்டிக்கு பக்கத்துல குழந்தைங்க படிக்குற பால்வாடி இருக்கு. இதுல 20 குழந்தைங்க படிக்கிறாங்க. இந்த தொட்டியால பால்வாடிய சுத்தி புள்ளு காடா மண்டி கெடக்கு. இந்த புல்லுக்கு இடையில பூச்சி ஏதாச்சம் இருந்தாக்கூட சீக்கிரம் கண்ணுக்கு தெரிய‌‌ மாட்டிக்குது. தொட்டி இடிஞ்சு விழுந்துடுமோ ஏதாச்சம் பூச்சி கடிச்சிடுமோன்னு பயத்துலயேதான் குழந்தைகள பால்வாடிக்கு அனுப்புறோம்” என்றனர்.

இது குறித்து மாதிரிவேளூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் காமராஜிடம் பேசியபோது, “இதே போன்று சிதிலமடைந்த நிலையில் 9 நீர்த்தேக்கத் தொட்டிகள் இருந்தது. கிராம சபை கூட்டத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் 4 நீர்த்தேக்கத் தொட்டிகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. விரைவில் மீதமுள்ள நீர்த்தேக்கத் தொட்டிகளும் கட்டப்படும்” என்று கூறினார்.

எவ்வித அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன் கிராம நிர்வாகமும், வட்டாட்சி நிர்வாகமும் உரிய கவனம் செலுத்தி புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *