
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், குன்னங்குளம் அருகே உள்ள செவ்வல்லூர் மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் சுஜித். 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ம் தேதி செவ்வல்லூர் பகுதியில் குன்னங்குளம் காவல் நிலைய போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது, சாலையோரம் நின்றிருந்த சுஜித்தின் நண்பர்களை போலீஸார் தாக்கியுள்ளனர். அது பற்றி சுஜித் நியாயம் கேட்டார். இதை அடுத்து சுஜித்தை ஜீப்பில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் குன்னங்குளம் போலீஸார். பின்னர் அவரை காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாக தாக்கினர். அதுமட்டும் அல்லாது அவர் மது போதையில் பிரச்னை செய்ததாகவும், போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சுஜித்தை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். சுஜித்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மது அருந்தவில்லை என சான்றளித்தனர். இதைத் தொடர்ந்து அவருக்கு கோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதற்கிடையே போலீஸார் தாக்கியதில் சுஜித்துக்கு காது கேட்கும் திறனில் குறைபாடு ஏற்பட்டது. தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தினார் சுஜித். இது சம்பந்தமாக போலீஸுக்கு எதிராக குன்னங்குளம் மஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார் சுஜித். மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் காவல் நிலையத்தில் சம்பவ தினத்தில் பதிவான சி.சி.டி.வி காட்சிகளை கேட்டார். அந்த சமயத்தில் போக்ஸோ வழக்கில் சம்பந்தப்பட்டவர் காவல் நிலையத்தில் இருந்ததால் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வழங்க இயலாது என போலீஸ் அதிகாரி பதிலளித்தார். கண்காணிப்பு கேமரா காட்சிகளை அழிக்கக் கூடாது என தகவல் அறியும் உரிமைச் சட்ட கமிஷனருக்கு சுஜித் மனு அளித்தார். மேலும், மனித உரிமை கமிஷனரிடம் சுஜித் மனு அளித்தார். மனித உரிமை கமிஷன் உத்தரவின் பேரில் காவல் நிலையத்தில் சம்பவ சமயத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சிகள் சுஜித்துக்கு வழங்கப்பட்டது.

அந்த வீடியோவில் சுஜித்தை அரை நிர்வாணமாக்கி காவலர்கள் தாக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. போலீஸின் அராஜகத்தை கண்டித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினர். இதை அடுத்து சுஜித்தை தாக்கும் வீடியோவில் இடம் பெற்றிருந்த குன்னங்குளம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் நூஹ்மான், போலீஸ் அதிகாரிகள் சசீந்திரன், சந்திப், சஜீவன் ஆகிய 4 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே போலீஸ் ஜீப் ஓட்டுனர் சுஹைல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குன்னங்குளம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சுகித் மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து முதல்வர் பினராயி விஜயன் பதில் கூறவேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.