
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரபல யூடியூபருடைய உணவகத்தின் கிளை திறப்பு விழாவையொட்டி வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் 10 பைசா நாணயத்தை முதலில் கொண்டு வரும் 200 பேருக்கு சிக்கன் பிரியாணி, இரண்டு பிரியாணிக்கு ஒரு பிரியாணி, இரண்டு மட்டன் பிரியாணிக்கு ஒரு சிக்கன் 65 இலவச அதிரடி ஆஃபர் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பிரியாணியை வாங்க பொதுமக்கள் முண்டியடித்து முயன்றதால் திடீர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் பொதுமக்களை வரிசையில் நிற்குமாறு அறிவுறுத்தியும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் பிரியாணி விற்றுத் தீர்ந்ததால் வரிசையில் நின்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். வந்ததற்கு பலூனையாவது எடுத்துச் செல்வோம் எனக் கடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பலூன்களை எடுத்துச் சென்றனர்.
அங்குப் பிரியாணி வாங்க வந்த பெண் ஒருவர் கூறுகையில், “இப்படிதான் மக்களைக் கவர ஏதாவது ஒரு அறிவிப்பைக் கூறிவிடுகிறார்கள். பின் அதை முழுமையாகப் பின்பற்ற முடியவில்லை. இதன் மீது ஆசை கொண்டு இங்கு வந்தவர்கள்தான் ஏமார்ந்து சென்று விடுகிறார்கள்” என்றார்.