
சென்னை: தேர்தல் நாள் வரை பசி, தூக்கம், ஓய்வை மறந்து உழைப்பை கொடுங்கள் என்று திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ஓரணியில் தமிழ்நாடு மற்றும் திமுக முப்பெரும் விழா தொடர்பாக, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலியில் நேற்று நடைபெற்றது.
இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் படுபாதாளத்துக்கு போன தமிழகத்தின் வளர்ச்சியை மீட்டெடுத்து 11.19 சதவீத வளர்ச்சியுடன் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக திமுக ஆட்சியில் தமிழகத்தை உயர்த்தியுள்ளோம். அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு அடித்தளமிட ஜெர்மனி, இங்கிலாந்துக்கு சென்று ரூ.15,516 கோடி முதலீடுகளை ஈர்த்து ‘சூப்பர் ஹிட்’ அடித்துள்ளோம்.