
புதிய கார் அல்லது வாகனம் வாங்கினால் அதனை கோயிலுக்கு எடுத்துச்சென்று பூஜை செய்வது வழக்கம். சிலர் வாகனம் வாங்கியவுடன் அதனை முதலில் எலுமிச்சம்பழத்தின் மீது ஏற்றுவதை சம்பிரதாயமாக வைத்துள்ளனர்.
டெல்லியில் அது போன்ற ஒரு சம்பிரதாயம் செய்ய முயன்று விபரீதத்தில் முடிந்துள்ளது.
டெல்லி நிர்மான் விகார் பகுதியில் உள்ள மகேந்திரா கார் ஷோரூமில் மாணி பவார் என்ற பெண் மகேந்திரா தார் என்ற காரை முன்பதிவு செய்திருந்தார்.
கார் தயாராகிவிட்டது என்று கூறி வந்து டெலிவரி எடுத்துச்செல்லும்படி ஷோரூம் ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர்.
உடனே மாணி பவார் தனது கணவர் பிரதீப்புடன் ஷோரூம் சென்றார். காரை ஷோரூமில் இருந்து வெளியில் எடுத்துச்செல்வதற்கு முன்பு அதற்கு பூஜை செய்ய முடிவு செய்தார்.
காருக்கு பூப்போட்டு, டயருக்கு அடியில் எலுமிச்சம் பழங்களை வைத்தனர்.
ஷோரூமின் முதல் தளத்தில் கார் இருந்தது. எலுமிச்சம் பழத்தின் மீது காரை ஏற்றுவதற்காக மாணிக் பவார் காரை ஸ்டார்ட் செய்து மெதுவாக நகர்த்தினார்.
அந்நேரம் எதிர்பாராத விதமாக கார் ஆக்சிலேட்டரை அழுத்திவிட்டார். இதனால் கார் வேகமெடுத்து ஷோரூம் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு தரைத்தளத்திற்கு சென்றது.
இதில் கார் மிகவும் மோசமாக சேதமடைந்தது. காரில் இருந்த மாணிக் பவார் மற்றும் ஷோரூம் ஊழியர் விகாஷ் ஆகியோர் இருந்தனர்.
காரில் இருந்த ஏர்பேக் உடனே விரிந்ததால் இருவருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.

ரூ.27 லட்சம் மதிப்புள்ள மகேந்திரா தார் கார் வாங்கிய உடன் பல லட்சம் செலவு வைத்துவிட்டது.
கீழே விழுந்த கார் தலைகுப்புற விழுந்தது. இக்காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி இருக்கிறது. இச்சம்பவத்தால் ஷோரூமிற்கு கீழே இருந்த சில பொருள்களும் சேதம் அடைந்தது.
இப்போது புதிய கார் பழுதுபார்க்க சென்று இருக்கிறது. கார் வாங்கிய மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நீடிக்காமல் போனது குறித்து மாணிக் பவார் கவலையடைந்துள்ளார்.