
போபால்: மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்ட நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சமையலராக பணிபுரிந்து வருபவர் ரவிந்தர் சிங் சவுகான் (30). இவருக்கு கடந்த ஏப்ரல் 9-ம் தேதி வருமான வரித் துறையிலிருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. அவருக்கோ அவரது மனைவிக்கோ ஆங்கிலம் தெரியாது என்பதால், அந்த நோட்டீஸை புறக்கணித்துவிட்டனர்.
பின்னர் கடந்த ஜூலை 25-ம் தேதி 2-வது முறையாக நோட்டீஸ் வந்துள்ளது. இதையடுத்து, ஆங்கிலம் தெரிந்தவர்களின் உதவியை நாடி உள்ளார். அப்போது, வருமான வரித் துறையின் குவாலியர் கிளையில் இருந்து வந்த அந்த நோட்டீஸில் 2020-21 நிதியாண்டுக்கு வருமான வரி பாக்கி ரூ.46 கோடியை செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் வழக்கறிஞர் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.