
ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும், அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோவுக்கும் சில காலமாகவே கருத்து மோதல் நிலவி வந்தது.
இதற்கிடையில், மல்லை சத்யா கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார். அதே நேரம் வைகோவும் – மல்லை சத்யாவும் மாறி மாறி தங்கள் அதிருப்திகளை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று (8-ம் தேதி) மல்லை சத்யாவை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்குவதாக வைகோ அறிவித்திருக்கிறார்.
இந்த சூழலில் மல்லை சத்யா மீதான குற்றச்சாட்டுகள், அவர் மீதான நடவடிக்கைகளுக்கான பின்னணி குறித்து தெரிந்துகொள்ள அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.
ம.தி.மு.க-விலிருந்து தகுதி நீக்கப்பட்டதற்கான காரணங்களை நீங்கள் எப்படி புரிந்துகொள்கிறீர்கள்?
தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்படக்கூடிய ஒரு சாடிஸ்ட் மனப்பான்மைதான் இந்த சூழலுக்குக் காரணம்.
தன் மகனுடைய அரசியலுக்காக எங்களைப் பலிகொடுத்துவிட்டார். மனைவி, மகள் மீதான நடத்தையில் சந்தேகம் கொள்கிறவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டவர்கள்.
தன்னுடைய மகனுக்காக இவ்வளவு பெரிய பழிச்சொல்லை என் மீது சுமத்தி, 32 ஆண்டுகள் கட்சிக்காக, தலைமைக்காக உழைத்த என்னைப் போன்ற தொண்டர்களை இழந்துவிட்டார்.
உங்கள் மீதான நடவடிக்கை திட்டமிட்டு செய்யப்பட்டதா?
ஆம்! இது ஏற்கெனவே எழுதப்பட்ட தீர்ப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. முதலில் என் மீது அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்து, போலியான விசாரணை நடத்தினார்கள். என்னிடம் விளக்கமளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்கள்.
நான் விளக்கமளிப்பதற்கு முன்பே, அதே நாளில் என்னை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில், இடைநீக்கம் செய்வதாகக் கூறி நடவடிக்கை எடுத்தார்கள்.
ஆனால், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவராக இருந்த இளவழகனே என்னுடன்தான் இருக்கிறார்.
ஒழுங்கு நடவடிக்கைக் குழு இல்லாமல் அவர்களே ஒரு முடிவை எடுத்துவிட்டு, ‘குழு நடவடிக்கை எடுத்தது, அதனால் நீக்கிவிட்டேன்’ எனச் சொன்னார்கள். இது கட்சி ஜனநாயகப் படுகொலை.

தலைவர் வைகோ, தன் செயல்பாடுகள் அரசியல் ஜோதியில் கரைந்துவிடும், யாரும் இதைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என நினைக்கலாம்.
ஆனால் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் எதையும் மறக்க மாட்டார்கள். அறம் நிச்சயம் வெல்லும்.
வைகோவின் இந்த நடவடிக்கையின் பின்னணி என்ன?
தலைவர் வைகோ முழுமையாக சூழ்நிலைக் கைதியாகிவிட்டார் என்றே நினைக்கிறேன். ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டார்.
திராவிட இயக்கத்தின் மகத்தான தலைவர், கொள்கையைத் தூரவைத்து லாபத்தை மட்டுமே முன்னிறுத்தும் திரிபுவாத இயக்கமாக, மகன் திராவிட முன்னேற்றக் கழகமாக அதை மாற்றிவிட்டார்.
இப்போது இந்த இயக்கத்துக்கும் திராவிட இயக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இனி அவர்கள் பா.ஜ.க. சாதி அமைப்புகள் என யாருடன் வேண்டுமானாலும் கைகோர்ப்பார்கள்.
மாபெரும் இயக்கம் தன் அடையாளத்தை இழந்து, துரை தலைமையிலான இயக்கமாக மாறிவிட்டது கவலைக்குரிய விஷயம். வருந்துகிறேன்.
துரை வைகோவுக்கும் உங்களுக்கும் என்னதான் பிரச்னை?
துரை வைகோ அரசியலுக்கு வருவதை நாங்கள் யாரும் எதிர்க்கவில்லை. தலைவரின் மகன் வரட்டும் என்றுதான் கருதினோம். ஆனால், அவர் இந்த அரசியலில் ஈடுபடுவதற்கான தகுதியையோ, ஆளுமையையோ வளர்த்துக்கொள்ளவில்லை.
நூறு சதவிகிதம் வலதுசாரி சிந்தனையுடன் செயல்படுவதையும், கார்ப்பரேட் முதலாளிகளைப் போல சிந்திப்பதையும், அவரின் செயல்பாடுகளையும் கவனித்தோம்.
தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகள் என்ன? தமிழ்நாட்டின் அடிப்படை உரிமைகள் எவை? மாநில சுயாட்சி என்றால் என்ன என்பது கூட தெரியாமல் இருக்கிறார்.
பா.ஜ.க-விடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். சமீபத்தில் கூட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் ஆலோசனையை வழங்கியிருக்கிறார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க-வின் முன்னணி தலைவர்களுக்குக் கூட தேசிய பா.ஜ.க தலைவர்கள் தங்களை சந்திக்க நேரம் கொடுப்பதில்லை.
ஆனால், துரை வைகோ கேட்டால் உடனே நேரம் கொடுக்கிறார்கள். அதற்குக் காரணம் அவர் தன்னுடைய பிரதிநிதியாக தமிழ்நாட்டிலே இருப்பார் எனக் கருதுகிறார்கள்.
ம.தி.மு.க பின்னணியில் பா.ஜ.க இருக்கிறதா!? பா.ஜ.க-வின் B டீமா?
ம.தி.மு.க பாஜக-வின் B டீம் அல்ல. ம.தி.மு.க-வே பா.ஜ.க தான் என்றே சொல்லலாம்!
என்னைக் கட்சியிலிருந்து நீக்குவதற்கு 8-ஆம் தேதியைத் தேர்வு செய்திருக்கிறார்கள். அதற்கான காரணம் தெரியுமா? இதைச் சொன்னால் புரியும் என நினைக்கிறேன்.

முதல்வர் ஸ்டாலின் உலக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரூ.15000 கோடி மதிப்பிலான முதலீட்டை ஈர்த்து வந்திருக்கிறார்.
உலகின் முதல் பல்கலைக்கழகமாகக் கருதப்படும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமூக நீதிப் போராளி பெரியாரின் படத்தை திறந்து வைத்திருக்கிறார்.
பொதுவுடமை சித்தாந்தத்தின் பிதாமகன் காரல் மார்க்ஸின் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தியிருக்கிறார்.
தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளின் நீர்ப்பாசனத்துக்காக அணை கட்டிய பென்னிகுவிக்கின் குடும்பத்தைச் சந்தித்து, நன்றி தெரிவித்திருக்கிறார்.
இவைகளையெல்லாம் முடித்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு திரும்பியது 8-ம் தேதி. இதையெல்லாம் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு தி.மு.க-வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் உண்டு.
என்னை நேற்றைய முன்தினமோ (7-ம் தேதி), அல்லது இன்றோ கூட தகுதி நீக்கம் செய்திருக்கலாம். முதல்வர் ஸ்டாலின் வரும் அன்று ஏன் இதை நிகழ்த்தினார்கள்?
முதல்வரின் சாதனையை ரசிக்காத ம.தி.மு.க தலைமை, இதை திசைதிருப்பும் வகையில் என்னைப் பயன்படுத்தி கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறது.
இது கூட்டணிக்குள் இருந்துகொண்டே குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி. இது பா.ஜ.க-வின் அஜெண்டா. அதனால்தான் இந்த நாளைத் தேர்வு செய்து அதை அரங்கேற்றியிருக்கிறார்கள் எனக் குற்றம் சாட்டுகிறேன்.
‘ஒரு தலைவராக வைகோ தோற்றுவிட்டார்’ என்றீர்களே! எதன் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டு?
இப்போதும் அதையேதான் சொல்கிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. துரை வைகோ, வைகோவை இயக்கத் தந்தை எனச் சொல்வார். அவர் இயக்கத் தந்தையல்ல. துரை வைகோ இயக்கும் தந்தை.
ஒரு குடும்பத்திற்கான தந்தையாக அவர் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அரசியல் கட்சித் தலைவராகத் தோற்றுவிட்டார்.
எந்த சித்தாந்தத்தை முன்வைத்து, இந்த அரசியல் களத்துக்கு வந்தாரோ, அதில் அவர் உறுதியாக இல்லை. அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கக் கூடாது.
அ.தி.மு.க தான் எதிரி என்றெல்லாம் கூறினார். பா.ஜ.க-வுடன் கூட்டணி கூடாது எனச் சொன்னவரும் அவர்தான். ஆனால் அவர் எதையும் பின்பற்றவில்லை.
இறுதியாக மக்கள் நலன் கூட்டணி அமைக்கும் போது ‘இனி என் தலையில் எப்பொழுதும் பச்சை துண்டைப் பார்க்கலாம். இனி நான் விவசாயிகளின் தோழனாக இருப்பேன்’ என்று சொன்னார். ஆனால் தேர்தலில் தோல்விக்குப் பின்னால் அந்தப் பச்சைத் துண்டைத் தூக்கி எறிந்துவிட்டார்.
அந்த நேரத்திலேயே இன்னொரு உறுதிமொழியும் அளித்தார். ‘நான் இனி கம்யூனிஸ்ட்டுகளைப் போல அரசு மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சை பெறுவேன்’ என்றார்.
அவர் நலனில் எனக்கு அக்கறை இருக்கிறது என்றாலும், அதில் அவர் உறுதியாக இருந்தாரா? எதிலும் அவர் உறுதியாக இருந்ததில்லை.
ம.தி.மு.க உறுப்பினர்களின் ஆதரவுடன் தானே துரை வைகோ அரசியலுக்குள் வந்தார்?
ஆரம்பத்தில் தலைவர் வைகோவின் உறுதியான கருத்தே ‘என் மகன் அரசியலுக்கு வர மாட்டார்’ என்பதுதான். கட்சியின் அலுவலகமான தாயகத்தில் 100 முறை சத்தியம் செய்து இதைச் சொல்லியிருக்கிறார்.

ஒருகட்டத்தில் அவருடைய மகன் அரசியலுக்கு வரவேண்டுமா? கூடாதா என்பதை ஆலோசிக்க 106 நிர்வாகிகளின் ஆலோசனையுடன் தேர்தல் நடத்தினார்.
ஆனால், இப்படி ஒரு தேர்தல் நடக்கப்போகிறது என்பது வாக்குப்பெட்டி வைக்கும் வரை எனக்குத் தெரியாது.
தலைவரின் மகன் அரசியலுக்குள் வருகிறார் என்றால், அதை தொண்டர்களுக்குப் பொதுவில் விவாதித்திருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாமல், தேர்தல் நடத்தினார்.
முடிவை அறிவித்து கட்சிப் பிரவேசம் செய்துவைத்தார். இதுவே கட்சியின் ஜனநாயகப் படுகொலைதான்.
கட்சியின் முதன்மைச் செயலாளர் பதவிக்கு கட்சியில் ஆட்களே இல்லையா? அவரின் மகனை விட ஆயிரம் மடங்கு தியாகம் செய்தவர்கள் கட்சியில் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் சென்று, நின்று, களத்தைச் சந்தித்தவர்கள் நாங்கள்.
தலைவரின் மகன் என்பதற்காகத்தானே அவருக்கு முதன்மைச் செயலாளர் பதவி வழங்கி, உடனே எம்.பி-யாக்கப்பட்டார். இந்தியாவிலேயே எந்தச் சின்னக் கட்சியில் அப்பாவும் மகனும் எம்.பியாக இருந்திருக்கிறார்கள்?
தலைவரின் மகன் என்பதைத் தாண்டி துரை வைகோ அரசியலுக்கு வர என்ன தகுதி இருக்கிறது? அவர் செய்த சத்தியத்துக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

கட்சியில் ஜனநாயகம் இல்லை என்கிறீர்களா?
கட்சியின் முதன்மைச் செயலாளர் பதவிக்கு கட்சியில் ஆட்களே இல்லையா? அவரின் மகனை விட ஆயிரம் மடங்கு தியாகம் செய்தவர்கள் கட்சியில் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் சென்று, நின்று, களத்தைச் சந்தித்தவர்கள் நாங்கள்.
தலைவரின் மகன் என்பதற்காகத்தானே அவருக்கு முதன்மைச் செயலாளர் பதவி வழங்கி, உடனே எம்.பி-யாக்கப்பட்டார். இந்தியாவிலேயே எந்தச் சின்னக் கட்சியில் அப்பாவும் மகனும் எம்.பியாக இருந்திருக்கிறார்கள்?
தலைவரின் மகன் என்பதைத் தாண்டி துரை வைகோ அரசியலுக்கு வர என்ன தகுதி இருக்கிறது? அவர் செய்த சத்தியத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும்.
தி.மு.க-வின் வாரிசு அரசியலை எதிர்த்து தொடங்கப்பட்ட கட்சி தானே ம.தி.மு.க?
ஆனால் இரண்டு கட்சிகளுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. தி.மு.க-வின் தற்போதைய தலைவரும், முதல்வரும், திராவிடப் பொற்கால ஆட்சி வழங்கும் ஸ்டாலின் தன்னுடைய 10 வயதிலிருந்து தி.மு.க-வில் களமாடியவர்.
கால் சட்டைப் பருவத்திலிருந்து தி.மு.க-வின் போராட்டத்தில் ஈடுபட்டவர். அதற்குப் பின்னால் படிப்படியாக இளைஞர் அணித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், சென்னை மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் எனப் பயணித்து முதல்வராகியிருக்கிறார்.
கட்சியிலும் வட்டப் பிரதிநிதியிலிருந்து இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் எனப் பயணித்து கட்சியின் தலைவர் என உயர்ந்திருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு 70 வயது என்றால், 60 ஆண்டுகள் திராவிட இயக்கத்தில் பணியாற்றியிருக்கிறார். ஆனால், மதிமுக-வில் தலைவர் வைகோவின் மகன் பாராசூட்டில் வந்து இறங்கி, 2 ஆண்டுகளில் எம்.பி பதவி வரைக்கும் வழங்கப்பட்டு, சர்வாதிகாரம் செய்துகொண்டிருக்கிறார்.
இது மக்களுக்கான இயக்கம். அந்த விழுமியத்தில் இருந்து தலைவர் வைகோ தவறிவிட்டார்.
இந்த நிகழ்வில் உங்கள் ஆதரவாளர்களின் கருத்து என்ன?
என் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, ம.தி.மு.க தொண்டர்கள், அரசியல் நெறியாளர்கள், டீக்கடை பெஞ்ச் வரை தலைவர் வைகோ செய்தது கண்மூடித்தனமான பெரும் பிழை. இதை எப்படி சரி செய்வது என தலைவர் வைகோ விழிபிதுங்கியிருக்கிறார் என கருதுகிறார்கள்.
அவருக்காக நான் பரிதாபப்படுகிறேன். 32 ஆண்டு காலமாக விசுவாசமாக இருந்த எங்களைப் போன்ற விசுவாசிகள் அவருக்குக் கிடைத்திருக்க மாட்டார்கள்.
அவர் சுட்டிக்காட்டிய அத்தனை இடங்களிலும் நாங்கள் கடமையாற்றியிருக்கிறோம். எங்களை அவரின் மகனுக்காக உதாசீனப்படுத்தி தூக்கி எறிந்ததை மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். அதனால்தான் பொதுச் சமூகம் அவருக்கு எதிராக நிற்கிறது.
நடந்த சம்பங்கள் மூலம் நீங்கள் கற்றதாக கருதும் பாடம் என்ன?
என்னதான் இருந்தாலும் தண்ணீரை விட இரத்தத்துக்கு கனம் கூடுதல் என்பதுதான் யதார்த்தம் என்பதை, இந்த சூழல் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.

உங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?
என்னுடைய பயணம் தொடரும். அடுத்த திங்கட்கிழமை செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும் விழா கொண்டாடுகிறோம்.
அந்தக் கூட்டத்தில் நாங்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து எங்களின் அடுத்த கட்ட பயணத்தை நோக்கி வலிமையாக முன்னேறுவோம்.
நூற்றுக்கணக்கான கட்சிப் பெயர்களையும், நூற்றுக்கணக்கான கொடிகளையும் பலரும் எங்களுக்கு அனுப்பி ஆதரவு வழங்கி வருகிறார்கள்.
நான் தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுக்க முடியாது. செப்டம்பர் 15 அன்றுதான் எங்கள் முடிவை இறுதி செய்து அறிவிப்போம்.
உங்களுடன் உங்கள் மனைவியும் அரசியல் நீரோட்டத்தில் இணைவாரா?
என் மனைவி நகராட்சி கவுன்சிலர் மட்டும்தான். அவர் என் துணைவியார். எப்போதும் எனக்குத் துணையாகத்தான் இருப்பார். அவர் என் அரசியல் களத்திலெல்லாம் இணையமாட்டார்.
ம.தி.மு.க தலைவர் வைகோவுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?
நான் தலைவரிடம் வேண்டுவதெல்லாம் ஒரே விஷயம்தான். உங்களை நம்பி 32 ஆண்டுகள் வாழ்க்கையை அர்ப்பணித்த எங்களை, துரோகி என்ற பழிச்சொல்லுடன் வெளியேற்றியிருக்கிறீர்கள்.

இப்படி வெளியாக்கப்பட்ட கடைசி நபர் நானாக இருக்கட்டும். இதுபோல ஒரு அபாண்டமான பழியை, உங்கள் மகனின் அரசியல் சுயநலத்துக்காக யாரின் மீதும் சுமத்த விடாதீர்கள். அதனால் நான் பட்ட துயரம் இன்றுவரை ஆறவில்லை.
இதிலிருந்து மீண்டு வர முடியுமா என்ற எண்ணம் மனதில் இருந்தபோது, மக்களின் ஆதரவுக் கரம், அவர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும்தான் எங்களால் சுதந்திரமாக வெளியே வர முடிந்தது.
எங்கள் பக்கம் நியாயம் இருப்பதை மக்கள் உணர்ந்ததால் தைரியமாக வெளியே வருகிறோம். உங்களால் அப்படி வெளியே வர முடியவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.