
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ஜீயரை தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “இந்திய குடியரசு துணை தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது தமிழகத்திற்கு பெருமை சேர்க்க கூடிய விஷயம். அவர் நேர்மையான நல்ல மனிதர். வெற்றி பெற்றதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். நாகேந்திரனை பொறுத்தவரையில் எனக்கு தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர் என்றும் நான் வெளியேறுவதற்கான காரணத்தை அனைத்தையும் ஏற்கனவே சொல்லிவிட்டேன். நயினார் நாகேந்திரன் என்.டி.ஏ கூட்டணியில் இணைய அழைப்பு விடுப்பதாக கூறிய நிலையில் என்னுடைய தொலைபேசி எண் அவரிடம் உள்ளது. அவர் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பேசலாம் என்று கூறினார்”.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அமித் ஷாவை சந்தித்தது குறித்த கேள்விக்கு, “அவர் முயற்சிக்கு தனது வாழ்த்துக்கள், அது கண்டிப்பாக வெற்றி பெறும். எந்த துரோகத்திற்காக நாங்கள் கட்சி தொடங்கினோமோ? எங்களது தொண்டர்கள் பாதிக்கப்பட்டு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டோமோ? அந்த துரோகத்தை ஏற்றுக் கொண்டு நாங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அங்கு இருக்கக்கூடிய நபர்களில் யார் மீதும் கோபம் இல்லை. அங்கு இருக்கக்கூடிய ஒரு நபரும் மற்றும் அவரை சார்ந்தவர்களையும் தான் நாங்கள் ஏற்கவில்லை. மேலும் என்.டி.ஏ கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமியை தவிர முதலமைச்சர் வேட்பாளரை யாரை நிறுத்தினாலும் கூட்டணியில் மீண்டும் இணைய தயார்.

எடப்பாடி பழனிச்சாமி 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறி கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வட தமிழக மக்களை ஏமாற்றினார். இதனால் தென் தமிழகத்தில் வாழக்கூடிய நூற்று ஐந்து சமுதாய மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஒரு கண்ணில் வெண்ணையும், மறு கண்ணில் சுண்ணாம்பு வைப்பேன் என்று பொய்யாக சொல்கிறார் என்று நாங்கள் பலமுறை சொன்னோம். அந்த அறிவிப்பு சட்டபூர்வமாக நீதிமன்றத்திற்கு சென்றால் நிற்காது அதுதான் நடந்தது. நான்கரை ஆண்டு முதல்வராக இருந்தபோது வட தமிழ்நாட்டு மக்கள் வாக்குகளை குறி வைத்து ஏமாற்றி தென் தமிழக மக்களுக்கு பெரிய துரோகம் இழைத்தார்.

பதவியில் அமர்த்தியவர்களுக்கு, உதவியவர்களுக்கு, ஆட்சி தொடர காரணமாக இருந்தவர்களுக்கு, அந்த ஆட்சியை நான்கரை ஆண்டு காலம் காப்பாற்றியவர்களுக்கு என துரோகத்தை தவிர வேறு ஏதும் தெரியாதவர் அவர். தமிழகத்தில் தேவையற்ற வசனங்களை பேசிவிட்டு முதல்வராக வாய்ப்பே இல்லை என்பதை தெரிந்தும் அமைதி பூங்காவாக இருக்கின்ற இடத்தில் சமுதாயத்தின் பெயரில் அறிவிப்பை வெளியிட்டு மக்கள் ஏமாற்றுகிறார். அனைத்து சமுதாயத்தினரும் சகோதரர்களாக வாழக்கூடிய பகுதியில் தேசிய தலைவர் பசும்பொன் ஐயா பெயருக்கு இழுக்கு ஏற்படும் விதமாக அவர் ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளார்” என கூறினார்.