
“நல்லா அழுவுடா அப்போதான் ரீல்ஸ் கெத்தா இருக்கும்’’
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தில் வேலை செய்து வரும் கார்த்தி, கட்டுமானப் பொருட்களின் பாதுகாப்புக்காக அங்கேயே இரவுநேரக் காவலாளியாகவும் இருக்கிறார்.
நேற்று இரவு உணவை சாப்பிட்ட கார்த்தி, அங்கேயே படுத்து தூங்கினார். இன்று அதிகாலை 3 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த கார்த்தியை எழுப்பிய மூன்று ரௌடிகள், போதையில் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அப்போது, `நீங்கள் யார்… என்னிடம் ஏன் தகராறு செய்கிறீர்கள்?’ என்று கேட்ட கார்த்தியை, பீர் பாட்டில், கடப்பாரை மற்றும் இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கியது அந்த போதைக் கும்பல்.
தட்டிக் கேட்ட முதியவர்களின் மண்டை உடைப்பு
அதில் வலி தாங்க முடியாமல், தன்னை விட்டுவிடுமாறு அவர்களின் காலில் விழுந்து கையெடுத்து கும்பிட்டு கதறி அழுதிருக்கிறார் கார்த்தி.
முகம் முழுவதும் ரத்தம் வழிய அவர் அழுவதை சிரித்தபடி ரசித்த அந்த போதைக் கும்பல், மேலும் அவரை கடப்பாரையால் தாக்கி தங்கள் செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறது. அத்துடன், “நல்லா அழுவுடா அப்போதான் ரீல்ஸ் கெத்தா இருக்கும்” என்றும் கூறியிருக்கிறது. அதையடுத்து நீண்ட முயற்சிக்குப் பிறகு அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார் கார்த்தி.
அதையடுத்து அந்த போதைக் கும்பல், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள பெட்டிக்கடை உரிமையாளரிடம் தகராறு செய்திருக்கிறது. அப்போது அதை தட்டிக் கேட்ட சுந்தரமூர்த்தி, ராஜேந்திரன் ஆகிய இரண்டு முதியவர்களை கட்டை மற்றும் கற்களால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.
பீர் பாட்டில் தாக்குதலுக்குள்ளான அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்
அங்கிருந்து மணலூர் ரயில்வே மேம்பாலத்திற்கு சென்ற அவர்கள், கள்ளக்குறிச்சியில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தை நிறுத்தி ஏறியிருக்கின்றனர். படியில் நின்றபடி வந்த அவர்களை உள்ளே வருமாறு கூறியிருக்கிறார்கள் ஓட்டுநர் கணேசனும், நடத்துநர் கண்ணனும்.
அப்போது அவர்களிடமும் வாக்குவாதம் செய்த போதைக் கும்பல், இடுப்பில் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து கணேசன் மற்றும் கண்ணனின் தலையில் தாக்கியது. அதில் அவர்களின் மண்டை உடைந்து கதறினார்கள்.
ரத்தம் வழிய வழிய அவர்கள் கதறியதைக் கண்டுகொள்ளாத அந்தக் கும்பல், அவர்களை மேலும் தாக்கியது. வலி பொறுக்க முடியாத அவர்கள், ஒரு கட்டத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு ஓடினார்கள்.

22 வயது ரௌடிகள்
அப்படியும் விடாத அந்த போதைக் கும்பல், அவர்களை விரட்டி விரட்டி தாக்கியது. அந்த போதைக் கும்பலிடம் இருந்து தப்பித்த அவர்கள், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கிருந்து விருத்தாசலம் போலீஸாருக்கும், எஸ்.பி ஜெயக்குமாருக்கும் தகவல் சென்றது.
அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போதையில் இவர்களை தாக்கியது, பழமலைநாதர் நகரைச் சேர்ந்த காமராஜ் என்பவரின் 22 வயது மகன் கந்தவேலு, முருகன் என்பவரின் 22 வயது மகன் சிவா (எ) விக்னேஷ், 22 வயது பாலாஜி என்பது தெரிய வந்தது.
அதையடுத்து விருத்தாசலம் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் மூன்று தனிப்படைகளை அமைத்து, அவர்களை வளைத்துப் பிடிக்க உத்தரவிட்டார் எஸ்.பி ஜெயக்குமார்.
போலீஸாரை கத்தியால் வெட்டிய ரௌடி
அதன்படி தேடுதல் வேட்டையில் இருந்த போலீஸாருக்கு, அந்த போதைக் கும்பல் பெரியகண்டியங்குப்பம் ரயில்வே கேட் அருகே உள்ள முந்திரிக்காட்டில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு உள்ளிட்ட போலீசார், போதைக் கும்பலை சுற்றிவளைத்தனர். அப்போது கந்தவேலு தான் வைத்திருந்த அரிவாளால் ஏட்டு வீரமணியை வெட்டினார்.
அதில் அவரின் கையில் வெட்டு விழுந்தது. அதையடுத்து மற்றொரு ஏட்டான வேல்முருகன் என்பவரையும் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு, கந்தவேலுவின் காலை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

தப்பியோடிய ரௌடிக்கு கை, கால் முறிவு
அதில் கந்தவேலு சுருண்டு விழுந்ததும், மற்ற இருவரும் தப்பியோடினர். அப்போது கீழே விழுந்ததில் சிவா (எ) விக்னேஷுக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதேசமயம் பாலாஜி அங்கிருந்து தப்பியோடினார்.
அதன்பிறகு காயமடைந்த இருவரும், ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய எஸ்.பி ஜெயக்குமார், “இன்று அதிகாலையில் பழமலைநாதர் நகரில் திருமண மண்டபத்தின் காவலாளி கார்த்திக் என்பவரை தாக்கியுள்ளனர்.
அங்கிருந்து அரசு மருத்துவமனை முன்புள்ள கடைக்காரர்கள், பின்பு அரசு பஸ் டிரைவர் என தாக்குதல் தொடர்ந்துள்ளது.
லோடு மேன் கூலித்தொழிலாளிகள்
குற்றவாளிகளை பிடிக்கச் சென்றபோது, போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் வேறு வழியின்றி தற்காப்புக்காக சுட்டதில் கந்தவேல் காலில் காயமடைந்தார். தப்பித்து ஓடும்போது விக்னேஷுக்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டது. அதேபோல தலைமறைவான பாலாஜியை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
எங்கள் முதல் கட்ட விசாரணையில் மது போதையில் இந்த சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. கந்தவேலுவும், விக்னேஷும் அங்கிருக்கும் கேஸ் குடோனில் கூலி தொழிலாளிகள். அவர்கள், கோயம்பேடு பழ மார்க்கெட்டிற்கு சென்று, அங்கும் கூலி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அடிதடி, கொலை வழக்கு ரௌடி
அனைத்து தாக்குதலையும் இன்ஸ்டா ரீல்ஸ்க்காக வீடியோ எடுத்திருக்கின்றனர். அதில் கார்த்தியை தாக்கியதை மட்டும் முதலில் கந்தவேலு தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதற்குள் எங்களிடம் சிக்கிக் கொண்டதால் மற்ற வீடியோக்கள் பதிவிடப்படவில்லை. கந்தவேலு மீது விருத்தாசலத்தில் 4 அடிதடி வழக்குகள், கோயம்பேடில் ஒரு கொலை முயற்சி உட்பட 3 வழக்குகள் என மொத்தமாக 7 வழக்குகள் உள்ளன. சிவா (எ) விக்னேஷ் மீது இரண்டு அடிதடி வழக்குகள் உள்ளன.
மூவரும் காலையில் லோடு ஏற்ற மது அருந்தியபோது, போதை தலைக்கேறி இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இது கஞ்சா போதையால் நடக்கவில்லை” என்றார்.