
ஆசிய கோப்பை தொடர் ஆப்கானிஸ்தான் vs ஹாங்காங் போட்டியுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது.
நாளை, இந்தியா தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதுகிறது.
இவ்வாறிருக்க, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாகத் திரும்பியிருப்பதால், சஞ்சு சாம்சன் எந்த இடத்தில் பேட்டிங் இறங்குவார் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.
ஏனெனில், டெஸ்ட் போட்டிகளில் 4-ம் இடத்தில் இறங்கும் கில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஆடிவருகிறார்.
கடைசியாக 2024 ஜூலையில் இலங்கையுடன் ஆடிய டி20 போட்டியில்கூட ஜெய்ஸ்வாலுடன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக கில் களமிறங்கியிருந்தார்.
ஆனால், அதற்குப் பிறகு இந்தியா ஆடிய மூன்று டி20 தொடர்களில் அவரும், ஜெய்ஸ்வாலும் அணியில் இடம்பெறவில்லை.

அந்த மூன்று தொடர்களிலும் அபிஷேக் ஷர்மாவும், சஞ்சு சாம்சனும்தான் ஓப்பனிங் இறங்கினர்.
இதில், இந்தியா ஆடிய கடைசி 10 டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் 3 சதங்களும், அபிஷேக் சர்மா ஒரு சதம், இரண்டு அரைசதங்களும் அடித்து ஓப்பனிங்கை வலுவாக வைத்திருக்கின்றனர்.
இவ்வாறிருக்க, ஆசிய கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் இதற்கு முன் ஓப்பனிங்கில் ஆடிய ஜெய்ஸ்வால், கில், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகிய நால்வரில் ஜெய்ஸ்வால் மட்டும் இடம்பெறவில்லை.
இதனால், ஓப்பனிங்கில் அபிஷேக் சர்மாவின் இடம் உறுதியாகிவிட்டது. ஆனால், இன்னொரு ஓப்பனிங் வீரர் கில்லா, சஞ்சு சாம்சனா என்பதுதான் உறுதியாகவில்லை.
ரவி சாஸ்திரி, கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் சாம்சனை இதற்கு முன் அவர் ஆடிய இடத்திலேயே களமிறக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், ஆசிய கோப்பை இன்று தொடங்குவதற்கு முன்பு அனைத்து அணிகளின் கேப்டன்களின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அந்த சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவர், பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இருப்பாரா என்று சூர்யகுமார் யாதவிடம் கேள்வியெழுப்பினார்.
அப்போது, “பிளேயிங் லெவனை உங்களுக்கு மெசேஜ் செய்கிறேன்” என்று நகைச்சுவையாகக் கூறிய சூர்யகுமார் யாதவ், “சஞ்சு சாம்சனை நாங்கள் நன்றாகப் பார்த்துக் கொள்கிறோம். கவலைப்படாதீர்கள், நாளை சரியான முடிவை நாங்கள் எடுப்போம்” என்று கூறினார்.