
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் போக்குவரத்து பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் செல்வகுமார். அதே பிரிவில் இந்திராகாந்தி என்பவர் காவலராக பணிபுரிந்து வந்தார். இருவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில், கடந்த மாதம் 17-ம் தேதி இருவரும் நடுரோட்டில் வைத்து சண்டையிட்டுக் கொண்டனர். இந்த பிரச்னையின் எதிரொலியால் செல்வகுமார் திருச்செந்தூருக்கும், காவலர் இந்திராகாந்தி புளியம்பட்டிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே இந்திராகாந்தியை செல்வகுமார் போனில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பேசிய செல்வகுமார், “நீ என் வேலையை கெடுத்துவிட்டாய். உன் பிள்ளைகளை பத்திரமாய் பார்த்துக் கொள். எனக்கு எப்போது வேண்டுமானாலும் கிறுக்கு பிடித்துவிடும். நேற்றிரவே உன்னை முடித்திருப்பேன். நூலிழையில் தப்பிவிட்டாய். உச்சகட்ட கொலைவெறியில் இருந்தேன். நேற்றே உன்னை முடித்திருப்பேன். இன்றைக்கு உன்னை அடக்கம் செய்திருப்பார்கள்.
என்றைக்கு இருந்தாலும் உன் உயிர் என் கையில்தான். ராஜாராம்கூட புகார் அளித்துப் பேசியிருக்கிறார்” என்றார். அதற்குப் பதிலளித்துப் பேசிய இந்திராகாந்தி, “உன் பேமிலி தூத்துக்குடியில்தான் உள்ளது. கோவில்பட்டிக்கும் திருச்செந்தூருக்கும் எவ்வளவு தூரம்? உனக்கு மட்டும்தான் பனிஸ்மெண்ட் கிடைத்திருக்கிறதா? எனக்கும்தான். நான் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறேன்” எனக் கூறியிருக்கிறார். அதன்பின் இருவரும் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் வசை பாடிவிட்டு செல்போன் அழைப்பை துண்டித்துவிட்டனர்.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியும், கோவில்பட்டி வட்டாரத்தில் பரபரப்பினையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்திராகாந்தி, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் செல்வகுமார் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து செல்வகுமாரை நெல்லை சரக டி.ஐ.ஜி சந்தோஷ் ஹாசிமணி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதே போல காவல்துறை நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக இந்திராகாந்தியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார். அவர் வெளியூரில் இருப்பதாகக் கூறியதால் அவரது வீட்டில் சஸ்பெண்ட் உத்தரவினை ஒட்டினர்.