
இந்தியா டுடே பத்திரிகையின் நேர்காணலில், “அதிமுகவுக்கு அட்வைஸ் வழங்க மாட்டோம், அடுத்த கட்சி எப்படி செயல்பட வேண்டும் என வெளியில் இருந்து கூறுவது சரியானது அல்ல” என்று பேசிய முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் விஜய்க்கு அட்வைஸ்களை வழங்கியிருக்கிறார்.
குறிப்பாக விஜய் சுற்றுப்பயண அட்டவணையில் அவர் சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் மக்களை சந்திப்பதாகக் கூறியிருப்பது குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் அண்ணாமலை.
அவர் பேசியதாவது, “ஒரு அரசியல் அல்லது அரசு நிர்வாகம் என்பது 24 மணி நேரமும் செய்யக் கூடிய வேலை. எப்போதும் நீங்கள் களத்தில் இருக்க வேண்டும். தவெகவை ஒரு சீரியஸான கட்சியாக எடுத்துக்கொண்டு வாக்களிக்க வேண்டுமென்றால், மக்கள் அந்த வேகத்தை களத்தில் 24 மணிநேரமும் பார்க்க வேண்டுமென நினைக்கிறார்கள்.
நான் சனிக்கிழமை மட்டும்தான் பிரசாரம் செய்வேன். சனி, ஞாயிறுகளில்தான் மக்களை சந்திப்பேன் என புதிதாக தொடங்கப்பட்ட கட்சியின் பொறுப்பான தலைவர் டிசம்பர் வரை கொண்டுசென்றால் மக்கள் நிச்சயமாக சோதிப்பார்கள்.
தவெக தங்களை திமுகவுக்கு எதிரி எனக் கூறுகிறார்கள் என்றால் அந்த வேகத்தை களத்தில் காட்டும்போதுதான் மக்கள் நம்புவார்கள். இன்று திமுகவுக்கு மாற்று தேசிய ஜனநாயக கூட்டணி என மக்கள் உணரக் காரணம் எங்கள் தலைவர்கள் முழுநேரமும் பொதுமக்கள் சந்திக்கும் சூழலில் இருக்கிறார்கள். தினமும் பாஜக கூட்டங்கள் நடக்கும்.

இன்று தவெக தங்களை எல்லோருக்கும் மாற்றாக ஒரு விடிவெள்ளியாக அறிவிக்கிறார்கள் என்றால் மாதத்தின் 31 நாள்களும் 24 மணி நேரமும் மக்கள் அணுகும் சூழலில் இருக்க வேண்டும்.
நான் மக்களை வீக் எண்ட் மட்டும்தான் பார்ப்பேன் என்றால், எந்த அளவுக்கு அரசியலில் சீரியஸாக இருக்கிறார்கள் என்ற கேள்வியை மக்கள் கேட்பார்கள்.
காவல்துறை தவெக களத்துக்கு வருவதை மட்டும் மறுக்கவில்லை. நாங்கள் யாத்திரை செய்தபோதும் மறுத்தார்கள். பல இடங்களில் நீதிமன்றத்துக்கு சென்று அனுமதி வாங்கியிருக்கிறோம். இது தமிழகத்தில் வழக்கமாக நடப்பதுதான். காவல்துறை எதிர்க்கட்சியாக இருப்பவர்களுக்கு சகஜமாக மறுப்பு தெரிவிக்கிறது.

காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கலாமே. ‘காவல்துறையில் யாரோ ஒரு அதிகாரி அனுமதி மறுத்தார், எங்களைப் பார்த்து பயந்துவிட்டார்கள்’ எனக் கூறுவதை விடுத்து, 24 மணி நேரமும் களத்தில் இருக்கும்போதுதான் மக்கள் தவெக-வுக்கு ஆதரவு கொடுப்பார்கள், திமுக தவெக-வுக்கு அச்சப்படும்.
களத்துக்கு வராமல் இருக்க காவல்துறை மீது காரணத்தை வைக்காமல், களத்தில் எப்போதும் இருக்க வேண்டும். அனுமதி கொடுக்காவிட்டால் மாற்று வழிகளைப் பார்க்க வேண்டும். சாக்கு சொல்வதை அரசியல் பார்வையாளனாக நான் ரசிக்கவில்லை. தீவர அரசியலில் ஈடுபடுபவர்கள் 24 மணி நேரமும் களத்தில் இருக்க வேண்டும்.” என்றார்.