
புதுச்சேரி நகரப் பகுதிகளில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக, கடந்த சில மாதங்களாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றன. கடந்த செப்டம்பர் 5-ம் தேதி கோவிந்தசாலை பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மக்கள், வயிற்றுப் போக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர்.
அதேபோல செப்டம்பர் 7-ம் தேதி அதே பகுதியை சேர்ந்த மேலும் சிலருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.
அன்றைய தினமே சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களில் கோவிந்தசாமி, பூசைமுத்து, பார்வதி என்ற மூவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அதையடுத்து கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததாலேயே மூன்று பேர் உயிரிழந்ததாக அவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியதால், பீதியடைந்தனர் கோவிந்தசாலை மக்கள்.
அதையடுத்து அங்கு ஆய்வுக்கு சென்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், `பெரும்பாலான நேரங்களில் குடிநீரில் கழிவு நீர் கலந்துதான் வருகிறது’ என்று அப்பகுதி மக்கள் வாக்குவாதம் செய்தனர்.
தொடர்ந்து முத்திரைப்பாளையத்தில் இருந்து வரும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறதா என நேற்று முழுவதும் ஆய்வு செய்ததுடன், அந்த நீரையும் ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.
இதற்கிடையில் மரப்பாலம், தேங்காய்திட்டு, நைனார்மண்டபம், சாரம், சக்தி நகர், கருவடிக்குப்பம், லாஸ்பேட், முதலியார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசுப் பொது மருத்துவமனையிலும், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

நேற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ நேரு, தன்னுடைய ஆதரவாளர்களுடன் சென்று பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டார். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள், நேரு எம்.எல்.ஏ-வுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.
அப்போது, `பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். இதுவரை 5 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் உடற்கூராய்வு சோதனையில் குடிநீர்தான் உயிரிழப்புக்குக் காரணம் என்று தெரிய வந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

அதேபோல தன்னுடைய தொண்டர்களுடன் இன்று பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட எதிர்கட்சித் தலைவரும், மாநில தி.மு.க அமைப்பாளருமான சிவா, “புதுச்சேரியில் ஒரு இடத்தில் மட்டும் குடிநீர் பிரச்னை இல்லை. அனைத்து தொகுதிகளிலும் இதே பிரச்னை உள்ளது. ஆனால் அரசு கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டிருக்கிறது. இந்த அலட்சியப் போக்கு சரியானது அல்ல. அப்பாவி மக்கள் மூன்று பேர் உயிரிழந்ததற்கு அரசுதான் காரணம். மக்கள் பீதியில் இருக்கின்றனர். ஆனால் முதல்வரும், அமைச்சர்களும் ஏ.சி அறையில் அமர்ந்து கொண்டு மீட்டிங் போடுகிறார்கள்” என்றார்.
இதையடுத்து பாதிப்பு ஏற்பட்டிருக்கும் பகுதிகளில் சுகாதார ஆய்வாளர்கள், உதவியாளர்கள், ஏ.என்.எம் (Auxiliary Nurse Midwife) மற்றும் ஆஷா (Accredited Social Health Activist) பணியாளர்களைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டு, அவர்களுக்கு ஓ.ஆர்.எஸ் (Oral Rehydration Solution) பாக்கெட்டுகளை வழங்கும்படி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் உத்தரவிட்டிருக்கிறார் சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் ஷமிமுனிசா பேகம்.

அதேபோல பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் தினமும் 20 லிட்டர் குடிநீர் வழங்க உத்தரவிட்டிருக்கிறார் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன். குடிநீரில் கழிவுநீர் கலந்ததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதா என்ற கேள்விக்கு, “குடிநீரின் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த முடிவு வந்த பிறகே அதுகுறித்து கூற முடியும்” என்றார் சுகாதாரத்துற இணை இயக்குநர் மருத்துவர் ரகுநாதன்.