
கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி 2.0-ல், தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் மருத்துவக் காப்பீட்டிற்கு ஜி.எஸ்.டி ஜீரோவாக்கப்பட்டிருக்கிறது. அதுவும் 18 சதவிகிதத்தில் இருந்து நேரடியாக ஜீரோவாக்கப்பட்டிருக்கிறது.
இது காப்பீட்டாளர்களுக்கு மிக மிக மகிழ்ச்சிகரமான செய்தி.
இந்த ஜி.எஸ்.டி குறைப்பால் இன்னும் பலர் காப்பீடுகளைத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தும், இந்த ஜி.எஸ்.டி குறைப்பு சம்பந்தமாக, சில கேள்விகள் எழுகின்றன. அதற்கான பதில்களைத் தருகிறார் காப்பீட்டு நிபுணர் சு.ஶ்ரீதரன்.
இனி தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் மருத்துவக் காப்பீடு என்ன ஆகும்?
இந்த இரு காப்பீடுகளிலும் 18 சதவிகிதமாக இருந்த ஜி.எஸ்.டி வரி தற்போது ஜீரோவாக்கப்பட்டுள்ளது. இதுவரை தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடுகளின் பிரீமியத்தில் வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரி இனி வசூலிக்கப்படாது. இதனால், பிரீமியம் தொகையின் விலை குறையும்.
இந்த வரிக் குறைப்பை ஈடுகட்ட, காப்பீட்டு நிறுவனங்கள் பிரீமியம் தொகையை உயர்த்தும் என்று கூறப்படுகிறதே. அது உண்மையா?
காப்பீடுகளில் வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரிகளைக், காப்பீட்டு நிறுவனங்கள் அப்படியே அரசாங்கத்திற்கு தான் செலுத்தி வந்தன. இப்போது அரசாங்கம் இந்த இரு காப்பீடுகளிலும் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்துவிட்டது.
இதனால், காப்பீடு நிறுவனங்கள் அந்த வரியை வசூலிக்கப்போவதில்லை… அரசாங்கத்திற்கு செலுத்தப்போவதில்லை.
ஆகையால், இந்த வரி ரத்து காப்பீடு நிறுவனங்களை எப்படியும் பாதிக்காது. ஆக, இந்தக் காரணத்தால், காப்பீட்டு நிறுவனங்கள் பிரீமியம் தொகையை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவே.

இனி மக்கள் உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் மருத்துவக் காப்பீடுகளில் ஜி.எஸ்.டி வரி நீக்கப்பட்டிருப்பது நிச்சயம் ஒரு சூப்பர் விஷயம் ஆகும். அதனால், இதுவரை ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்காதவர்கள் இந்த அறிவிப்பு அமலுக்கு வந்ததும் எடுத்துவிடுங்கள்.
வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால், முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்போதுமே நல்லது.
எதாவது அசம்பாவித சூழல் நடக்கும் பட்சத்தில், இந்தக் காப்பீடுகள் நம்மையும், நம் குடும்பத்தையும் காப்பாற்றும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இப்போதே காப்பீடு எடுத்தால் இந்தப் பயனை பெற முடியாது. ஜி.எஸ்.டி 2.0 வரும் செப்டம்பர் 22-ம் தேதி முதல் தான் அமலுக்கு வருகிறது. அதனால், அப்போதிருந்து பிரீமியத்தில் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படாது.
சில காப்பீட்டு நிறுவனங்களே, இப்போது வரும் வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டை 22-ம் தேதி முதல் தான் தொடங்குகிறது. இது மக்களுக்கு பிரீமியம் தொகையைக் குறைக்கும் என்கிற நோக்கில் செயல்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஜி.எஸ்.டி வரியோடு கட்டிய பிரீமியங்கள் என்ன ஆகும்?
அந்த ஜி.எஸ்.டி வரிகள் ஏற்கெனவே அரசாங்கத்திற்கு சென்றுவிட்டது. அதனால், அவை திரும்ப பெற இயலாது.
இனிமேல் (செப்டம்பர் 22-க்கு மேல்) கட்டப்போகும், பிரீமியங்களில் தான் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படாது.
இந்த வரி மாற்றத்தால், காப்பீட்டுத் திட்டம் மாற்றப்படுமா?
இந்த ஜி.எஸ்.டி மாற்றம் என்பது வெறும் வரி மாற்றமே. இதை தவிர, காப்பீட்டுத் திட்டத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. இதுவரை காப்பீட்டுத் திட்டத்தில் என்னென்ன குறிப்பிடப்பட்டிருந்ததோ, அதே தான் தொடரும். அதே கவரேஜ்கள் தான் இருக்கும். அதனால், பயம் தேவையில்லை.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…