
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைப்புச் செயலாளர் செங்கோட்டையனுக்கும் பல மாதங்களாக உட்கட்சி மோதல் நீடித்து வருகிறது.
இவ்வாறிருக்க, அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு செப்டம்பர் 5-ம் தேதி செங்கோட்டையன் கெடு விதித்தார்.
அடுத்த நாளே, அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் கட்சிப் பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
இதற்கு எதிர்வினையாற்றிய செங்கோட்டையன், தன்னைக் கேட்காமல் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கான விளைவு போகப் போகத் தெரியும் என்றார்.
அதோடு, “பா.ஜ.க தலைவர்கள் யாரையும் சந்திக்க புதுடெல்லி செல்லவில்லை” என நேற்று கோவை விமான நிலையத்திலிருந்து ஹரித்வார் புறப்பட்டார்.
ஆனால், அவர் கிளம்பும்போதே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைத்தான் சந்திக்கச் செல்கிறார் எனப் பேச்சு அடிபட்டது.
அதற்கேற்றாற்போல, டெல்லியில் அமித் ஷாவை நேரில் சந்தித்து சுமார் அரை மணிநேரம் செங்கோட்டையன் பேசியதாக டெல்லி அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் பரவின.
இந்த நிலையில், இன்று பிற்பகல் கோவை விமான நிலையம் வந்தடைந்த செங்கோட்டையன், தனது பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்.
அப்போது செங்கோட்டையன், “நேற்று ஹரித்வார் செல்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றிருந்தேன். நான் டெல்லி சென்றதும் உள்துறை அமைச்சரைச் சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டது.
அதன்மூலமாக, உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஆகிய இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இன்றைய அரசியல் சூழ்நிலை பற்றி கருத்துக்கள் அங்கு பரிமாறப்பட்டன. எல்லோரும் ஒன்றிணைய வேண்டும், இயக்கம் வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கருத்துக்களை அவர்களிடத்தில் எடுத்துச் சொன்னேன்.
அந்தச் சந்திப்பின்போது ரயில்வே துறை அமைச்சரும் வந்தார். அவரிடம், ஈரோட்டிலிருந்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தை மாற்றினால் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறினேன்.
எனவே மக்கள் பணி செய்வதற்கும், இயக்கம் வலிமை பெறுவதற்கும் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று தெரிவித்தார்.