
கும்பகோணம், ஆடுதுறை அருகே உள்ள மேல மருத்துவக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின். ஆடுதுறை பேரூராட்சி தலைவராக இருக்கும் இவர், பா.ம.க-வில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர், தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிகள் வகிக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் பா.ம.க சார்பில் போட்டியிட்டார். இவர் தற்போது டாக்டர் ராமதாஸ் அணியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த நிலையில் கடந்த வாரம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த ம.க.ஸ்டாலினை மர்ம நபர்கள் நாட்டு வெடி குண்டு வீசி கொலை செய்ய முயன்றனர்.
அப்போது தனது அறையில் இருந்த கழிப்பறைக்குள் மறைந்திருந்து தப்பித்தார் ம.க.ஸ்டாலின். இந்த சம்பவத்தில் அவரது ஆதரவாளர்களான களம்பரத்தைச் சேர்ந்த இளையராஜா(44), மஞ்சமல்லியைச் சேர்ந்த அருண் (25) ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டதில் காயமடைந்தனர். இதையடுத்து கொலை முயற்சியில் ஈடுப்பட்ட கும்பல் வந்த காரிலேயே தப்பி சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ம.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
போலீஸார் குற்றவாளிகளை பிடிப்பதற்காக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தலையில் குற்றவாளிகள் சென்ற கார் விழுப்புரம் மாவடத்தில் நின்றதைத் தொடர்ந்து போலீஸார் அந்த காரை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து திருவிடைமருதூர் காவல் சரக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸில் சரணடைந்த மருதுபாண்டியன் என்பவரிடமும் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் உடையாளூரை சேர்ந்த லடசுமணன்(35) என்பவர் குற்றவாளிகள் பயன்படுத்திய நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

போலீஸார் தலைமறைவாக இருந்த லட்சுமணனை சந்தேகத்தின் பேரில் தேடி வந்தனர். இதைத் தொடர்ந்து லட்சுமணன் தம்பி ராமனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர், நேற்று இரவு லட்சுமணன் மனைவி மதனாவை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்தநிலையில் நேற்று இரவு, லட்சுமணன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்ததும் அவர்கள் வந்து உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கும்பகோணம், ஆடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.