
“அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஒன்றிணைந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளின் மீது அதிக தடைகள் மற்றும் அதிக வரிகளை விதிக்க வேண்டும். இது ரஷ்யாவின் பொருளாதாரத்தைச் சரியச் செய்யும். அப்போது ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தைக்கு வருவார்”
சமீபத்திய நேர்காணலில், அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்காட் பெசண்ட்டின் வார்த்தைகள் இவை.
சீனாவுக்கு மட்டும் ‘நோ’
இப்போதைக்கு ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் இந்தியா, சீனா மற்றும் பிரேசில். இதற்காக ஏற்கெனவே இந்தியா மீது கூடுதல் 25 சதவிகித வரி விதிக்கப்பட்டுவிட்டது.
அமெரிக்கா – சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருப்பதால், ரஷ்ய எண்ணெய்யின் டாப் இறக்குமதி நாடான சீனாவை அமெரிக்கா ஒன்றும் செய்யவில்லை.
இதுவரை ரஷ்யா மீது எந்தவொரு நேரடி வரியையும் அமெரிக்கா விதிக்கவில்லை. அதற்குப் பதிலாக, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் மீது தான் வரி விதித்து வருகிறது.
அமெரிக்காவின் டார்க்கெட்
அமெரிக்காவைப் பொறுத்தவரை, நேரடியாக ரஷ்யா மீது வரி விதித்தால், ரஷ்ய அதிபர் புதின் அமைதி பேச்சுவார்த்தைக்கு வராமல் போகலாம்.
ஆனால், அவருக்கு எந்த நெருக்கடியும் கொடுக்காமல், பேச்சுவார்த்தைக்கு அழைத்துவர முடியாது. அதனால், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளை டார்க்கெட் செய்கிறது அமெரிக்கா.
கூடுதல் வரி விதிக்கப்பட்டாலும், இந்தியா மற்றும் பிரேசில் நாடுகள் ரஷ்யாவில் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்துவருகிறது. மேலும், இரு நாடுகளுமே ரஷ்யா உடன் நட்பு பாராட்டி வருகின்றன.

இந்தியா, பிரேசில்…
கடந்த வாரம், சீனாவில் இந்தியப் பிரதமர் மோடி, புதின், சீன அதிபர் ஜின்பிங் இணக்கமாகப் பேசிக்கொண்டனர்.
நேற்று, பிரிக்ஸ் தலைவர்களை ஒன்றிணைத்து கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார் பிரேசில் அதிபர் லூலா. இதில் இந்தியா சார்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டிருக்கிறார். புதின் மற்றும் ஜின்பிங்கும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர்.
‘இந்திய நாட்டின் நலனுக்கு எது நல்லதோ, அதைத்தான் இந்தியா செய்யும். குறைந்த விலையில் கிடைக்கும் ரஷ்ய எண்ணெய்யை இந்தியா தொடர்ந்து வாங்கும்’ என்று இந்தியா பலமுறை தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திவிட்டது.
பிரேசிலும் இறங்கி வருவதாக இல்லை. இந்த நிலையில்தான், மீண்டும் புதிய வரிகள்… ஐரோப்பிய ஒன்றியமும் வரி விதிக்க வேண்டும் என்று அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளது அமெரிக்கா.
அழைப்பு!
நேற்று முன்தினம், உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தி உள்ளது ரஷ்யா. அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு (கடந்த வெள்ளிக்கிழமை), உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைப் பேச்சுவார்த்தைக்காக ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிற்கு அழைத்திருந்தது ரஷ்யா. இதற்கு ஜெலன்ஸ்கி சம்மதிக்கவில்லை.
ஒரு பக்கம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது… இன்னொரு பக்கம் உக்ரைன் மீது தாக்குதல் என ரஷ்யா இரட்டை நிலைப்பாட்டைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தாக்குதலைத் தடுத்து, போரை நிறுத்தத்திற்குக் கொண்டுவர, ரஷ்யாவிற்கு உடனடி நெருக்கடி எதையாவது கொண்டுவர வேண்டும். அதனால் தான், அமெரிக்கா இப்போது ஐரோப்ப ஒன்றியத்தையும் அழைக்கிறது.
ஒருவேளை, ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு வரி விதித்தால், அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும் புதினை எப்படியும் மடக்கிவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள்.
வரி விதிக்கப்படுமா?
ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்க இரண்டாம் கட்ட வரிகளை விதிக்க தயார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில், இந்தியா – அமெரிக்கா உறவு ஸ்பெஷலானது என்று குறிப்பிட்டிருந்தார் ட்ரம்ப்.
அப்படியிருக்கையில், உடனடியாக இந்தியாவிற்கு வரி ஏற்றப்படுமா? என்கிற கேள்வி எழுகிறது. இதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தாலும், இந்தியாவிற்கு ஆதரவாக சீனா குரல் கொடுத்து வருகிறது.
ஆக, இந்தியா மீது மீண்டும் வரி உயர்த்தப்பட்டால், பிரிக்ஸ் நாடுகள் வலுவான நகர்வுகளை முன்னெடுக்கும். புதின் பேச்சுவார்த்தைக்கு வருவாரா… வந்தாலும் சாதகமான முடிவை எடுப்பாரா என்பது சந்தேகம் தான்.