
நீர் பூத்த நெருப்பாகப் போராட்டம்
2025 செப்டம்பர் 8ம் தேதி இந்தியாவின் அண்டை நாடான நேபாள நாட்டில் உலகத்தைத் திருப்பி பார்க்க வைக்கும் மிகப்பெரும் போராட்டமானது தொடங்கியது.
இந்தப் போராட்டத்தை முன் நின்று நடத்தியவர்கள் பள்ளி சீருடை அணிந்த மாணவர்களும் பதின் வயதைப் பூர்த்தி செய்யாத இளைஞர்களும்தான். 80ஸ் கிட்ஸ் 90 கிட்ஸ் வரிசையில் 1997 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை பிறந்தவர்களை gen z என உலகம் அழைக்கிறது. இவர்கள்தான் நேபாள நாட்டின் அரசுக்கு எதிராக மிகப்பெரும் போராட்டத்தை அந்நாட்டு அரசு எடுத்த ஒரு முடிவிற்காக மேற்கொண்டார்கள்
நேபாள நாட்டில் கடந்த 2006 ஆம் ஆண்டு மன்னர் ஆட்சி அகற்றப்பட்டதற்குப் பிறகு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் ஆட்சி செய்து வருகின்றன. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு முதல் நேபாள நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நேபால் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றன. இதில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.பி.ஒலி பிரதமராகச் செயல்பட்டு வருகிறார்.
நேபால் நாட்டு அரசுக்கு எதிராக ஊழல் முறைகேடு எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, அரசிற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன.
நீர் பூத்த நெருப்பாகவே நேபாள நாட்டின் அரசியல் சூழல் இருந்து வந்த நிலையில் அது கொழுந்து விட்டு ஏறிய காரணமாக அமைந்தது நேபாள அரசின் சமூக வலைத்தளக் கொள்கை .
சமூக வலைத்தளக் கொள்கை
கடந்த மாதம் நேபாள நாட்டின் உச்ச நீதிமன்றம், சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் வன்முறை பரப்பப்படுவதாகவும் நிறைய இணைய வழி மோசடிகளும் நடைபெற்று வருவதாகவும் இதனைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியிருந்தது
ஏற்கனவே தங்கள் அரசுக்கு எதிரான அனைத்து பிரசாரங்களும் சமூக வலைத்தளப் பக்கங்களில்தான் நடத்தப்படுகிறது. எனவே அவற்றை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த ஆளும் அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் நன்மையைச் செய்வதாகத் தோன்றியது.
இதற்கான தனியான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் எனக் கடந்த மாத இறுதியில் நேபாள அரசாங்கம் அறிவிக்க, அதற்கான காலக்கெடு 2025 செப்டம்பர் நான்காம் தேதியுடன் நிறைவடைந்தது.
சமூக வலைத்தளம் முடக்கம்
டிக் டாக் உள்ளிட்ட சில சமூக வலைத்தள நிறுவனங்கள் மட்டுமே அரசின் புதிய விதிமுறைகளை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். விதிமுறைகளை ஏற்காத யூடியூப், வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என 26க்கும் அதிகமான பிரபல சமூக வலைத்தளங்களை அதிரடியாக முடக்கியது நேபாள நாட்டு அரசு. ஆனால் இதுதான் பெரும் வினையாக வந்து முடிந்தது.
தடை அமலுக்கு வந்தது வெள்ளிக்கிழமை முதல். பிறகு சனி ஞாயிறு விடுமுறை என்பதால் எதிர்ப்பு என்பது பெரிய அளவில் ஏற்படவில்லை. ஆனால் திங்கட்கிழமை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்குப் புறப்பட்டுச் சென்றவர்கள் அப்படியே திரும்பி போராட்டக் களத்திற்கு வந்தனர்.
வெடித்த போராட்டம்
நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டு நகரில் ஆயிரக்கணக்கில் குவியத் துவங்கிய இந்த இளைஞர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். நேபாள நாட்டின் குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் இல்லம், நாராயணன் தர்பார் அருங்காட்சியகம் எனத் தலைநகரின் முக்கிய நகரங்களையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிடத் தொடங்கினர்.
இவர்களைத் தடுக்க வேலிகள் அமைக்கப்பட்டிருந்த போதும் அதைத் தாண்டி போராட்டக்காரர்கள் செல்ல முயன்றுள்ளனர். இதனால் போராட்டம் கலவரமாக மாறியது. இதில் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் மேற்கொண்ட எதிர் நடவடிக்கைகளில் சுமார் 20 இளைஞர்கள் கொல்லப்பட்ட நிலையில் 250க்கும் அதிகமான படுகாயம் அடைந்தனர்.

சமூக வலைத்தள முடக்கத்திற்கு இந்தப் போராட்டம் அடிப்படை காரணமாக இருந்தாலும் அரசுக்கு எதிரான மனநிலை மிகத் தீவிரமாக இருப்பதைப் போராட்டத்தில் வாயிலாகப் புரிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக நேபாள நாட்டின் ஊழல் மலிந்து விட்டது. வாரிசு அரசியல் அதிகரித்துவிட்டது போன்ற பதாகைகள் இளைஞர்கள் கையிலிருந்தது அதற்கான காட்சி.

கடந்த நான்காம் தேதி முதல் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தாலும், டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் மட்டும் தொடர்ந்து இயங்கி வந்தன. இதில் பல அரசியல் தலைவர்களின் வாரிசுகள் சொகுசாக இருப்பது போன்ற வீடியோக்களை வெளியாகி இருந்தன. இது தான் இந்த இளைஞர்களைக் கோபமடையச் செய்திருக்கிறது. அதனால் டிக்டாக் வாயிலாகவே அனைவரும் ஒன்று கூட வேண்டும் என்ற திட்டங்களை வகுத்து அதைச் செயல்படுத்தியும் இருக்கிறார்கள்.
ஆசியக் கண்டத்தில் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றான நேபாள நாட்டில் நடந்த இந்தப் போராட்டம் தற்பொழுது உலகம் முழுவதும் பேசு பொருளாக மாறி இருக்கின்றது. நேபாள அரசின் செயல்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பு கண்டனங்களைத் தெரிவித்து இருக்கிறது.
எழுந்த கண்டனம் – அடிபணிந்தது அரசு
கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்றுவதற்காகப் போராடிய இளைஞர்களை அடக்குமுறையால் நசுக்க முயல்வதற்குக் கண்டனங்களைத் தெரிவிப்பதாகப் பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களும் எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வன்முறைக்குப் பிறகு நேபாள நாட்டில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். “வன்முறைக்கு எந்த வகையிலும் இடம் கொடுக்க மாட்டோம். நாட்டின் இறையாண்மை தான் முக்கியம். அதனால் எக்காரணத்தைக் கொண்டும் சமூக வலைத்தள தடை திரும்பப் பெறப்படாது” என நேபாள நாட்டுப் பிரதமர் திட்டவட்டமாகக் கூறியிருந்த நிலையில் போராட்டம் என்பது தொடர்ந்து நடைபெற்று வந்தது
இதனை அடுத்து வேறு வழியே இல்லாமல் சமூக வலைத்தள தடை உத்தரவைத் திரும்பப் பெறுவதாக 9.9. 2025 அன்று நாட்டு அரசு அறிவித்துள்ளது.
Gen z இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டம் வெற்றி அடைந்தது என்றாலும் அதற்காக 20 இளைஞர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாக அமைந்துள்ளது