
“முக்குலத்தோர் வாக்குகளைப் பெறுவதற்காகவே பாஜக, நயினார் நாகேந்திரனை தலைவர் ஆக்கியுள்ளது” என்று பரபரப்பாகப் பல விஷயங்களைப் பேசியுள்ளார் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் நடிகர் கருணாஸ்.
சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தவர். “தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக வெளிநாடுகளிலிருந்த ரூ. 15,516 கோடி முதலீட்டை ஈர்த்து 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உறுதியளித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டுகிறோம்.
2026 தேர்தலில் பாஜக அரசியல் ஆதாயம் தேட அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. அவர்களின் முகத்திரையைக் கிழிக்க பாஜக-வினரின் தமிழர் விரோதப் போக்கை எடுத்துரைக்க, ஆர்எஸ்எஸ் சித்தாந்த அடிப்படையில் பாஜக-வின் அரசியல் சூதாட்டம் குறித்து புத்தகம் எழுதி வருகிறேன். அதில், கீழடி, விவசாயம், நீட்-க்கு எதிராகச் செயல்படும் பாஜக-வின் முகத்திரையைக் கிழிக்க, மக்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதி உள்ளேன், அதனை தமிழக முதல்வர் மூலம் வெளியிடத் திட்டமிட்டுள்ளேன்.
எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக எஃக்குக்கோட்டையாக இருந்ததை எடப்பாடி பழனிசாமி தற்போதைய சுற்றுப்பயணத்திலேயே மக்கிய கோட்டையாக முழு மூச்சாக மாற்றி வருகிறார்.
கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆக்கப்பட்டார் என்ற விவரத்தை வெளியிடுவது அரசியல் நாகரிகம் இல்லை. பச்சைப் பொய் சொல்லும் எடப்பாடி பழனிசாமிக்குத் தேவைப்பட்டால் கூவத்தூர் ஆதாரங்களை வெளியிடுவேன். மூத்த தலைவர் செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமியின் செயல்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றேன். நம்பிக்கை துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி அவர் வாழும் காலத்திலேயே அதற்கான பலனை அனுபவிப்பார்.

முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என 2016 சட்டமன்ற கூட்டத்தில் நான் கூறிய போது அதனை ஏற்காத அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கபட நாடகம் ஆடுகிறார். அதிமுகவை வெளியிலிருந்து யாரும் அழிக்கத் தேவையில்லை. அதனை எடப்பாடியே நிறைவேற்றுவார்.
பிரிந்து சென்ற அதிமுக தலைவர்கள் ஒன்று சேர்ந்தாலும் அதிமுகவிற்கு ஆதரவு தரமாட்டேன். சசிகலாவிற்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தியவர்தான் ஓபிஎஸ். சசிகலா சிறைக்குச் சென்றது யாரால் என்பது அனைவருக்கும் தெரியும், டிடிவி தினகரன் ஆர்.கே நகரில் போட்டியிடாமல் இருந்திருந்தால் இந்தக் குழப்பங்கள் ஏற்பட்டு இருக்காது. முக்குலத்தோர் சமுதாயத்தின் அரசியல் அடையாளத்தைத் திட்டமிட்டு அளித்தது பாஜக. அதற்குத் துணையாக இருந்தவர்கள் இவர்கள்.
நயினார் நாகேந்திரன் புனிதர் அல்ல. அவரும் அரசியல் குட்டையில் ஊறிய மட்டைதான். முக்குலத்தோர் வாக்குகளைப் பெறுவதற்காகவே நயினார் நாகேந்திரனை பாஜக தலைவர் ஆக்கியுள்ளது.
புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் இன்னும் மக்களைச் சந்திக்கவில்லை. கார்ப்பரேட் முறையில், சமூக வலைத்தளங்கள் மூலம் அரசியல் நடத்தி விடலாம் என அவர் நினைக்கிறார். தமிழர்கள் வாழ்வு நலம் பெற யார் வந்தாலும் நான் அவர்களை வரவேற்கின்றேன். விஜய் பெரிய நடிகர் என்பதால் அவருக்குக் கூட்டம் வரும்.
எல்லா தவறுகளையும் செய்து விட்டு, உத்தமர் போல வேஷம் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி. அவரிடம் உண்மை, நன்றியினை எதிர்பார்க்க முடியாது. அவர் எப்படி தமிழக மக்களுக்கு உண்மையாக இருப்பார்? குற்றச்சாட்டு இல்லாத அரசியல்வாதிகள் யாரும் இல்லை.

அரசியலில் நேர்மையானவர்கள் யாரும் இல்லை, ஆனால், மக்கள் நேர்மையானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்ட கட்சியினைப் படுகுழியில் தள்ளும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சி அமையும், அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எங்கே இருக்கும் என்று கூட தெரியாது. ஆனால் அதிமுக நன்றாக இருக்க வேண்டுமென செங்கோட்டையன் போல் நானும் நினைக்கின்றேன். மேலும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியே வெற்றி பெறுவது கடினம். செங்கோட்டையனை கட்சியை விட்டு நீக்கியதால் கொங்கு மண்டல மக்கள் கோபத்தில் உள்ளனர் எனவே அவரது இன மக்களே அவரைத் தோற்கடிப்பார்கள்” என்றார்.