
குடிபோதையில் சாலையோரம் சிலர் விழுந்து கிடப்பதை பார்க்க முடியும். அவர்கள் எழுந்து வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலும், அவர்களால் எழுந்து செல்ல முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் மது மயக்கத்தில் இருப்பார்கள்.
மத்திய பிரதேசத்தில் ஒருவர் குடிபோதையில் கீழே விழுந்து கிடந்ததை பொதுமக்கள் பிணம் என்று நினைத்துவிட்டனர்.
சாகர் மாவட்டத்தில் உள்ள குராய் என்ற கிராமத்தில் ஒருவர் சாலையோரம் கிடந்த சகதியில் குப்புற விழுந்து கிடந்தார். அப்பகுதி வழியாக சென்றவர்கள் அதனை பார்த்தும் கண்டுகொள்ளாமல் சென்றனர்.
தொடர்ந்து 6 மணி நேரமாக அந்த இளைஞர் அசைவற்று குப்புற விழுந்து கிடந்தார். இதனால் அவர் இறந்து கிடக்கிறார் என்று நினைத்த கிராம மக்கள், போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பிணத்தை தூக்கிச்செல்ல வாகனமும் வந்தது.
கிராம மக்கள் அங்கு கூடினர். போலீஸார் குப்புற விழுந்து கிடந்த நபரை புரட்டிப்போடுவதற்காக குனிந்தபோது எந்த வித அசைவும் இல்லாமல் கிடந்த நபர் திடீரென எழுந்தார்.
அதனை பார்த்து போலீஸாரும், அங்கு கூடியிருந்த பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.
திடீரென எழுந்த நபர்,’நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்’ என்று போலீஸாரிடம் தெரிவித்தார்.
அவரது முகம் முழுக்க யார் என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு சகதியாக இருந்தது. அவர் திடீரென எழுந்ததால் சிலர் பயத்தில் அந்த இடத்தை காலி செய்துவிட்டு நகர்ந்தனர்.
அந்த நபரிடம் விசாரித்தபோது, அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது சிறுநீர் கழிக்க வாகனத்தை நிறுத்தினேன் என்றும், சாலையோரம் சிறுநீர் கழிக்க முயன்றபோது நிற்க முடியாமல் தடுமாறி சகதியில் விழுந்துவிட்டேன் என்றும், அளவுக்கு அதிகமாக போதை இருந்ததால் என்னால் எழுந்திருக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

இதனை நேரில் பார்த்த கிராம வாசி ஒருவர் கூறுகையில்,”இது போன்ற ஒரு சம்பவத்தை இதற்கு முன்பு நாங்கள் பார்த்ததில்லை. நாங்கள் பிணம் என்றுதான் நினைத்தோம். ஆனால் அவர் திடீரென எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்ததால் பேய் வந்துவிட்டதாக பயந்துவிட்டோம்” என்று தெரிவித்தார்.
அந்த நபர் வந்த இரு சக்கர வாகனமும் அருகில் தான் நின்றது. அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து போலீஸார் பத்திரமாக அனுப்பி வைத்தனர். இறந்த நபர் உயிரோடு வந்தார் என்று மாவட்டம் முழுக்க பேச்சாக இருக்கிறது.