
சென்னை சென்ட்ரல் அல்லிக்குளம் அருகே இன்று காலை முதல் பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயத்தை எதிர்த்தும் 13 தூய்மைப் பணியாளர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியிருந்தனர்.
அவர்களை பெரியமேடு காவல்துறையினர் இப்போது கைது செய்திருக்கின்றனர்.
சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே, மண்டலங்கள் 5, 6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் போராடியவர்களை ஆகஸ்ட் 13ஆம் தேதி நள்ளிரவில் காவல்துறையினர் கைது செய்தனர். ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
தனியார்மயத்துக்கு எதிராக, தூய்மைப் பணியாளர்கள் சார்பில் உழைப்போர் உரிமை இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 4ஆம் தேதியன்று சிந்தாதிரிப்பேட்டையின் மே தினப் பூங்காவில் அடுத்த கட்ட போராட்டத்தை பற்றி ஆலோசிக்க சுமார் 300 பெண் தூய்மைப் பணியாளர்கள் கூடினர்.
அங்கு கூடிய தூய்மைப் பணியாளர்களையும் காவல்துறையினர் கூண்டோடு கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

இதைத்தொடர்ந்து, நேற்று சென்னை கொருக்குப்பேட்டை, இந்திரா நகரில் 13 பெண் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் வீட்டருகேயே பணி நிரந்தரம் வேண்டி உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
உடனடியாக அந்தப் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, அந்தப் பெண்களையும், அவர்களுக்கு ஆதரவாக நின்ற தூய்மைப் பணியாளர்களையும் கைது செய்து சமூக நலக்கூடத்தில் வைத்திருந்தனர். நேற்று இரவு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று காலையில் சென்னை சென்ட்ரல் அல்லிக்குளம் அருகே 13 பெண் தூய்மைப் பணியாளர்கள் ஒன்றாக அமர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர்.
விஷயம் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரியமேடு காவல்துறையினர், போராட்டத்தை தொடங்கிய 1 மணி நேரத்திலேயே அவர்களை கைது செய்து, புரசைவாக்கத்திலுள்ள சமூக நலக்கூடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

“முதலமைச்சர், எங்களுக்கு எதாச்சு நல்லது பண்ணணும்னு நினைச்சா, எங்க வேலையை திரும்ப கொடுங்க. 2 மாதமாக நாங்க எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கோம். இல்லன்னா எங்க மேல வழக்குப்பதிவு செஞ்சு ஜெயில் அடைங்க” என கைதான பெண் தூய்மைப் பணியாளர்கள் செய்தியாளர்களிடம் கூறினர்.