• September 9, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: எனக்கு கடந்த மாதம் முன்பு சிறிய விபத்து ஏற்பட்டது. உடனே டிடி ஊசி போட்டுக் கொண்டேன். அதைத் தொடர்ந்து கடந்த வாரம் நாய் கடித்தது. அதற்கும் டிடி ஊசி போடச் சொன்னதால் போட்டுக் கொண்டேன். ஆனால் அதன் பிறகுதான், ஏற்கெனவே டிடி போட்டதால் மறுபடி தேவையில்லை என்று சிலர் சொன்னார்கள்.

டிடி ஊசி என்பது என்ன? அதை எப்போதெல்லாம், எந்த இடைவெளியில் போட்டுக் கொள்ள வேண்டும்? இருமுறை போட்டதால் எனக்கு ஏதேனும் பிரச்னை வருமா? டிடி ஊசியே, நாய் கடிக்கும் போது போதுமானதா?

பதில் சொல்கிறார்: சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை சிறப்பு மருத்துவர் சஃபி.

நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி

டிடி  என்பது  டெட்டனஸ் டாக்ஸாயிடு (Tetanus Toxoid) என்பதன் சுருக்கம். டெட்டனஸ் என ஒரு நோய் உண்டு. தமிழில் அதை ‘ரண ஜன்னி’ என்று சொல்வார்கள்.  சற்றே மோசமான அந்த நோயை ஏற்படுத்தும் கிருமியை வரவிடாமல் தடுப்பதுதான் டிடி ஊசியின் வேலை.

இந்தக் கிருமிகள், துருப்பிடித்த ஸ்டீல், கரடுமுரடான மேற்பரப்புகள்,  மண் தரையிலுள்ள தூசு போன்றவற்றில் அதிகமிருக்க வாய்ப்பு உண்டு. அதனால்தான் துருப்பிடித்த இடங்களில் பட்டு அடிபட்டால் உடனே டிடி ஊசி போடச் சொல்லி அறிவுறுத்துகிறோம். அப்படித் தடுப்பூசி போடுவது உண்மையிலேயே பாதுகாப்பானது.

விபத்து ஏற்பட்டு விழுந்ததும் டிடி ஊசி போட்டுக்கொண்டதாகச் சொல்கிறீர்கள், அதில் தவறில்லை. பொதுவாக மருத்துவர்கள், 2 வருடங்களுக்கொரு முறை டிடி ஊசி போட்டுக்கொண்டால் போதும் என்றே சொல்வோம்.

அதுவே, தொழிற்சாலைகளில் வேலை செய்வோர், துப்புரவுத் தொழிலாளிகள் போன்றோருக்கெல்லாம் ஆறு மாதங்களுக்கொரு முறை டிடி ஊசி போட்டுக்கொள்ளச்  சொல்வோம்.

அதாவது எங்கேயாவது அடிபட்ட நிலையில், அதற்கு முன் டிடி ஊசி போட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டால், மறுபடி ஒரு டோஸ் டிடி ஊசி போட்டுக்கொள்வது பாதுகாப்பானது என்றே அறிவுறுத்துவோம்.

நாய்க்கடிக்கு ‘ஏஆர்வி’ எனப்படும் ஆன்டி ரேபிஸ் வாக்சின் (Anti-Rabies vaccine) தான் போட வேண்டும்.

நாய்க்கடிக்கு டிடி ஊசி போட வேண்டிய அவசியமில்லை. நாய்க்கடிக்கு ‘ஏஆர்வி’ எனப்படும் ஆன்டி ரேபிஸ் வாக்சின் (Anti-Rabies vaccine)  தான் போட வேண்டும்.

சமீபகாலமாக பெரும் பிரச்னையாக உருவெடுத்துவரும் நாய்க்கடி பிரச்னைக்கு, எந்த மருத்துவமனையிலாவது டிடி ஊசி போட்டால், அது வேண்டாம் என்று சொல்லி ஆன்டி ரேபிஸ் தடுப்பூசி போடும்படி கேளுங்கள்.

இது எல்லா  அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகள், ஆரம்ப சுகாதார மையங்களிலும் போடப்படும். நாய்க்கடிக்கான தடுப்பூசியைப் போடத் தவறினால், அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

ரேபிஸ் நோய் வராமல் தடுக்க ஏஆர்வியும், ஒருவேளை கடி மிகவும் மோசமாக இருந்தால், இம்யூனே குளோபுலின் ஊசியும் போட வேண்டியிருக்கும்.

பல பேர், இது போல நாய்க்கடிக்கு வெறும் டிடி ஊசியை மட்டும் போட்டுக்கொண்டு உயிரிழக்கும் சம்பவங்களை அதிகம் கேள்விப்படுகிறோம். எனவே, கவனமாக இருக்கவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *