• September 9, 2025
  • NewsEditor
  • 0

கல்லூரி முடிந்த பின்னர் தினமும் நான், நிலக்கோட்டை, அரசு நூலகத்தில் சிறிது நேரம் படிப்பது வழக்கம். போட்டித் தேர்வுக்குத் தயாராக அங்கே வழக்கமாக வருபவர், தமிழ்மொழி அக்கா. அன்று, அவருக்கு அலைபேசியில் ஓர் அழைப்பு வர, ‘இதோ அரை மணி நேரத்துல அங்கயிருப்பேன்’ எனப் பதற்றத்துடன் பேசியபடியே அவசரமாகக் கிளம்பிச் சென்றார். மறுநாள், ‘நேத்து என்னாச்சுக்கா?’ என்று விசாரிக்க… அக்கா அதற்கு அவர் வாழ்க்கையையே பதிலாகச் சொல்ல வேண்டியிருந்தது.

“குடும்பத்துல கஷ்டம். நான் ஒரு ஸ்டூடியோல போட்டோ கிராபரா வேலைபார்த்துட்டேதான் போட்டித் தேர்வுக்குத் தயாராகிட்டு வர்றேன். அந்த ஸ்டூடியோல இருந்துதான் நேத்து கூப்பிட்டிருந்தாங்க’’ என்றவர், தொடர்ந்து பேசினார்…

“எங்க ஊரு, மதுரை மாவட்டம், அய்யனார் குளம். எனக்கு ஒரு தங்கச்சி, ஒரு தம்பி. நாங்க வளர வளர, அப்பாவோட குடிப்பழக்கமும் வளர்ந்துச்சு. சம்பாதிக்கிறது எல்லாம் குடிக்கே போச்சு. பொறுத்துப் போன, சகிச்சுப்போன எங்கம்மா, ஒரு கட்டத்துல எங்க மூணு பேரையும் கூட்டிக்கிட்டு அவங்க சொந்த ஊரான நிலக்கோட்டைக்கு வந்துட்டாங்க.

அம்மா கூலி வேலை செஞ்சு, பூ பறிக்கப் போய்னு கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தாங்க. நான் நல்லா படிச்சு, நிலக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில பன்னிரண்டாம் வகுப்பில் ஸ்கூல் செகண்ட் மார்க் வாங்கினேன். பக்கத்துல ஒரு காலேஜ்ல பி.எஸ்சி மேத்ஸ்ல சேர்ந்தேன். காலேஜ் ஃபீஸ் கட்டவும், குடும்பத்துக்கு உதவவும் நானும் அம்மாகூட சேர்ந்து காலையில 3 மணிக்கே பூ பறிக்கப் போயிருவேன். முடிச்சுட்டு வந்து காலேஜுக்கு கிளம்பிடுவேன்’’ என்பவர், படிப்பை முடித்ததும் வழிகாட்ட யாரும் இல்லாது நின்றிருக்கிறார்.

“ஒரு நாள், எங்கப்பா இறந்துபோயிட்டார். எங்க கூட அவர் இல்லைனாலும், உறவா எங்கேயோ இருக்கார்னு நினைச்சிட்டு இருந்தோம். ஆனா, அதுவும் இல்லைனு ஆனப்போ நாங்க நாலு பேரும், இந்தக் குடி நாங்க குடும்பமா வாழ்ந்திருக்க வேண்டிய வாழ்க்கையை எல்லாம் அழிச்சிட்டதையும், அப்பாவையும் நினைச்சு அழுதோம்.

நான் படிப்பை முடிச்சப்போ, என்ன வேலைக்குப் போறது, எங்க வேலைக்குப் போறதுனு எல்லாம் வழிகாட்ட எனக்கு யாரும் இல்ல. ஆனா, வேலைக்குப் போனாதான் நம்ம குடும்ப நிலைமை மாறும் என்பதால, அந்தத் தேடலை ஆரம்பிச்சேன். அப்போதான், நிலக்கோட்டையில இருக்கிற அரசு நூலகத்துல நிறைய இளைஞர்கள் போட்டித் தேர்வுக்குப் படிச்சிட்டு இருக்காங்கனு தெரியவந்தது. நானும் இங்க வந்து படிக்க ஆரம்பிச்சேன். சில தேர்வுகள் எழுதினேன். தேர்வாகல’’ என்பவர், தேர்வுக்கான தயாரிப்பு ஒருபக்கம் இருக்க, வேலையில் சேர்ந்திருக்கிறார்.

“என் குடும்ப சூழ்நிலையால, நான் வேலைக்குப் போகணும்னு முடிவெடுத்தேன். என் சொந்தக்காரங்களோட ஸ்டூடியோல பார்ட் டைம் ஆக வேலைபார்த்துட்டே படிச்சிட்டு வந்தேன். அப்படியே அங்க போட்டோகிராபியும் கத்துக்கிட்டு, போட்டோக்களும் எடுக்க ஆரம்பிச்சேன். கல்யாணம், காதணி விழானு பல ஊர்களுக்கும் போக ஆரம்பிச்சேன். பணி அனுபவத்தோடு கூடவே, ரொம்ப கஷ்டத்தோட, கட்டுப்பாடுகளோட வளர்ந்த ஒரு பொண்ணு, ஆணுக்கு சமமா எல்லா இடங்களுக்கும் போய், பாராட்டுகள், விமர்சனங்கள்னு பார்த்து, எதிர்நீச்சல் போடக் கத்துக்கிட்ட வாழ்க்கை அனுபவமும் கிடைச்சது. நேத்துக்கூட ஒரு வெடிங் போட்டோஷூட் இருந்தது. அதான் லைப்ரரியில இருந்து அவசரமா கிளம்பிப் போனேன்.

போட்டோகிராபர் வேலையில கிடைச்ச பணம், குடும்பத்துக்கு பலம் கொடுத்தது. நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா, என் குடும்பத்தை யார் பார்த்துக்குவானு… அம்மா எவ்வளவோ சொல்லியும் கல்யாணம் இப்போதைக்கு வேண்டாம்னு உறுதியா சொல்லிட்டேன். என் தங்கச்சி கல்யாணத்தை முடிச்சுட்டேன். தம்பி வேலைக்குப் போயிட்டான். இப்போ எனக்கு ஒரே இலக்கு… ஒரு கவர்ன் மென்ட் ஆபீஸராகணும்!”

சின்னப் புன்னகையோடு நிறுத்தி விட்டு, புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தார் தமிழ்மொழி அக்கா. முயற்சி… திருவினையாகட்டும்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *