• September 8, 2025
  • NewsEditor
  • 0

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோட்டை அடுத்த செருப்பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஷிதா டிபானி (23). இவர் புலியூர்சாகை ஊராட்சி தமிழக வெற்றிக் கழகத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. திண்டிவனத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் வழக்கறிஞர் பயிற்சிக்காக நாகர்கோவில் கோர்ட்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது, ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பழவிளையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜயகுமார்(28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் போனில் பேசிக்கொள்ளும் அளவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜயகுமார் கடந்த மாதம் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், “கடந்த 12.07.2025 அன்று எனது போனில் அழைத்த அர்ஷிதா டிபானி, ‘உங்கள் வீட்டுக்கு அருகே நிற்கிறேன். அவசரமாக பாத்ரூம் செல்ல வேண்டும்’ எனக் கேட்டார். எனது வீட்டு பாத்ரூமை பயன்படுத்தும்படி கூறினேன். எனது வீட்டுக்கு அவர்வந்து பாத்ரூமை பயன்படுத்தினார். அப்போது நான் வெளியே நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். சுமார் 10 நிமிடத்தில் அர்ஷிதா சென்றுவிட்டார். நானும் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டேன். கடந்த 14.07.2025 அன்று என் தாயின் அறைக்குச் சென்று பார்த்தபோது 11.25 சவரன் நகையை காணவில்லை. அர்ஷிதா வந்து சென்றபிறகு வேறு யாரும் அங்குவரவில்லை. எனவே அவர் நகைய திருடிச் சென்றுவிட்டார்” என புகாரில் கூறியிருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் நேற்று அர்ஷிதாவை கைது செய்தனர்.

த.வெ.க போஸ்டரில் அர்ஷிதா டிபான் புகைப்படம்

இதற்கிடையே அர்ஷிதா த.வெ.க நிர்வாகி இல்லை என அக்கட்சியின் கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளர் சபின் தெரிவித்துள்ளார். இதுபற்றி சபீன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“அர்ஷிதா தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் எந்த பதவியிலும் பதவியும் இல்லை. அதிகாரப்பூர்வமாக அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. கட்சி பெயருடன் தொடர்புபடுத்தி வெளியிடப்பட்ட செய்தி அடிப்படையற்றது. அரசியல் நோக்கத்திற்காக கட்சி பெயரை பயன்படுத்துவதை கண்டிக்கிறோம். கட்சியில் பெயளர் தவறாக இணைத்து செய்திகள் வெளியிட வேண்டாம் என்று இந்த அறிவிப்பு வாயிலாக வலியுறுத்துகிறோம். த.வெ.க ஒன்றிய இணைச் செயலாளர் அரிசிதா என்று குறிப்பிடப்பட்டுள்ள இச்செய்தி முற்றிலும் தவறானது என இந்த அறிவிப்பு வாயிலாக தமிழக வெற்றிக் கழகம் மறுப்பினை தெரிவித்து கொள்கிறது.”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நகை திருட்டு வழக்கில் கைதான அர்ஷிதா டிபானி

அதே சமயம் கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளராக பதவியேற்ற சபினுக்கு வாழ்த்து தெரிவித்து அர்ஷிதா டிபானி அடித்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து விளக்கம் கேட்டு த.வெ.க மாவட்டச் செயலாளர் சபினிடம் பேசினோம், “அர்ஷிதா பத்து வழக்கறிஞர்களுடன் கட்சியில் இணைவதாகச் சொன்னார். அப்போது எனக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கியதால் வாழ்த்து போஸ்டரில் அந்த ஊராட்சியை சேர்ந்தவர்கள் அர்ஷிதாவின் போட்டோவை ஒருமுறை பயன்படுத்தி உள்ளனர். அதன் பிறகு அவர் கட்சியில் இணையவில்லை” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *