
நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே ஜக்தீப் தன்கர், குடியரசு துணைத் தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
இதனால், மாநிலங்களவை சபாநாயகரான குடியரசு துணைத் தலைவர் இல்லாமலேயே மழைக்கால கூட்டத்தொடர் நடந்து முடிந்தது.
அதேநேரத்தில், காலியாக இருக்கும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் பதவிக்கு செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியானது.
இதில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாராஷ்டிரா முதல்வர் சி.பி. ராதாகிருஷ்ணனை தங்களின் வேட்பாளராக அறிவித்தது.
மறுபக்கம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அடங்கிய இந்தியா கூட்டணி, தெலங்கானாவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை தங்களின் வேட்பாளராக அறிவித்தது.
இந்த நிலையில், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்து புதிய குடியரசு துணைத் தலைவரை நாளை தேர்ந்தெடுக்கப்போகிறார்கள்.
இந்தத் தேர்தலில், மாநிலங்களவை நியமன எம்.பி-க்களும் வாக்களிக்க தகுதியடையவர்கள். ஒவ்வொரு எம்.பி-யும் ஒரு வாக்கு மட்டுமே அளிக்க முடியும்.
எனவே, மக்களவை, மாநிலங்களவையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி யாருக்கு வெற்றிவாய்ப்பு இருக்கிறது என்று பார்ப்போம்…

மக்களவை & மாநிலங்களவை எம்.பி-க்கள் மொத்த எண்ணிக்கை!
மக்களவை – 543 (ஒரு இடம் காலி)
மாநிலங்களவை – 245 (6 இடங்கள் காலி)
மொத்தம் – 788 (7 இடங்கள் காலி)
இரு அவைகளையும் சேர்த்து 781 வாக்குகள் மட்டுமே இருப்பதால், இதில் வெற்றிபெற 391 வாக்குகள் தேவை.
இருப்பினும், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதி (4 வாக்குகள்) மற்றும் ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் (11 வாக்குகள்) ஆகியவை இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்ததால், மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 770-ஆக குறைந்து, வெற்றிபெறுவதற்கான வாக்கு எண்ணிக்கை 386-ஆக குறைந்திருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம்:
மக்களவை – 293
மாநிலங்களவை – 132
மொத்தம் – 425
எந்த கூட்டனிலும் இடம்பெறாத கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்கு எண்ணிக்கை வெற்றிபெற தேவையான வாக்குகளின் எண்ணிக்கையை விட 39 வாக்குகள் கூடுதலாக இருப்பதால் அவர்களின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வெற்றிவாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது.
இதுகூடவே, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸும் (மக்களவை 4, மாநிலங்களவை 7) தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.
இதனால், தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 436-ஆக உயர்ந்திருக்கிறது.
இந்தியா கூட்டணியின் பலம்:
மக்களவை – 234
மாநிலங்களவை – 77
மொத்தம் – 311
இந்தியா கூட்டணியானது தற்போதைய நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணியை விடவும் 114 வாக்குகள் குறைவாக 305 வாக்குகளுடன் இருப்பதால் சுதர்சன் ரெட்டிக்கான வெற்றி வாய்ப்பு மோசமாக உள்ளது.

இந்தத் தேர்தலில், எம்.பி-க்கள் கட்சி சார்ந்தவராக இருந்தாலும் தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்கலாம். இருப்பினும், ஆளும் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கும் வாக்கு வித்தியாசம் மிகப்பெரிய அளவில், ஒரு சில எம்.பி-க்கள் மாற்றி வாக்களித்தாலும் அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தபோவதில்லை.
எனவே, துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு சுதர்சன் ரெட்டியைக் காட்டிலும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அதிகமாக இருக்கிறது.