
ஹரியானாவின் பரிதாபாத்தில் வசித்தவர் சச்சின் கபூர். இவரது வீடு நான்கு மாடிகள் கொண்ட கட்டடத்தில் இரண்டாவது தளத்தில் இருக்கிறது. வீட்டில் அனைவரும் இரவில் உறங்கிக்கொண்டிருந்தபோது முதல் தளத்தில் இருந்த வீட்டில் ஏ.சி திடீரென வெடித்து சிதறியது. இதனால் புகையுடன் கூடிய தீப்பிடித்து எரிந்தது. இதில் முதல் மாடி மற்றும் இரண்டாவது மாடி புகை மண்டலமானது. ஏ.சி வெடித்து சிதறிய வீட்டில் யாரும் இல்லாமல் காலியாக இருந்தது.
இரண்டாவது மாடிக்கு பரவிய புகையால் அங்கு உறங்கிக்கொண்டிருந்த சச்சின் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்களால் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு புகை மண்டலம் சூழ்ந்தது. அவர்கள் வெளியில் வர முயன்றனர். ஆனால் முடியாமல் போய்விட்டது. இதனால் அவர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு அறையில் உறங்கிக்கொண்டிருந்த அவர்களது மகன் ஜன்னல் வழியாக வெளியில் குதித்து உயிர் தப்பினார்.
அவர் இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் அவர்கள் வளர்த்து வந்த வளர்ப்பு நாய் கூட மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. மூன்றாவது மாடியை சச்சின் கபூர் தனது அலுவலகமாக பயன்படுத்தி வந்தார். நான்காவது மாடியில் ஒரு குடும்பம் வசித்து வந்தது. அவர்கள் வெடி சத்தம் கேட்டு ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.