
போகிற போக்கில் பார்த்தால் ரஷ்யா – உக்ரைன் போர் இப்போதைக்கு நிறுத்தத்தை எட்டாது போலும்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சமாதான முயற்சியின் காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை, அமைதி பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை மாஸ்கோவிற்கு அழைத்தது ரஷ்யா. அவருக்கு தேவையான பாதுகாப்பை வழங்கவும் உறுதியளித்தது.
ஜெலன்ஸ்கி பதில்
ஆனால், ஜெலன்ஸ்கியோ, “ஒவ்வொரு நாளும் ஏவுகணைகளையும், தாக்குதல்களையும் என்னுடைய நாடு சந்தித்துகொண்டிருக்கிறது. என்னால் மாஸ்கோவிற்கு செல்ல முடியாது. தீவிரவாதிகளின் தலைநகரத்திற்கு என்னால் செல்ல முடியாது. வேண்டுமானால், புதின் கிய்விற்கு (உக்ரைன் தலைநகரம்) வரட்டும்” என்று அந்த அழைப்பை மறுத்துவிட்டார்.
ரஷ்ய அழைப்பிற்கு முந்தைய நாள், “இந்தப் பேச்சுவார்த்தை நடக்கக்கூடாது என்று ரஷ்யா நினைத்தால், என்னை அவர்கள் மாஸ்கோவிற்கு அழைப்பார்கள்” என்று கூறியிருந்தார். அதற்கேற்றாற் மாதிரியே, ரஷ்யாவின் அழைப்பு நடந்தது.
புதின் என்ன நினைக்கிறார்?
ஜெலன்ஸ்கியைப் பொறுத்தவரை, அவர் நீண்ட நாள்களாகவே ரஷ்ய அதிபர் புதின் உடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறார். ஆனால், புதினின் நிலைப்பாடு அது இல்லை.
உக்ரைன் நேட்டோவில் சேரக்கூடாது… ரஷ்யா ஆக்கிரமித்த உக்ரைன் பகுதிகளை ரஷ்யா திரும்ப தராது – இது தான் புதின் முடிவு.
இந்த முடிவுகளுக்கு ஜெலன்ஸ்கி ஒத்துக்கொள்ளும் வரை, புதின் ஜெலன்ஸ்கியைச் சந்திப்பதற்கான ஆக்கபூர்வமான எந்த முடிவுகளையும் எடுக்கமாட்டார் என்று தெரிகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில், உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது ரஷ்யா. இந்தத் தாக்குதலில் 800-க்கும் மேற்பட்ட டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும், இந்தப் போர் தொடங்கிய கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளில், முதன்முறையாக உக்ரைனின் அரசு கட்டடத்தின் மீது நேற்று தாக்குதலை நடத்தியுள்ளது ரஷ்யா.
ஒரு பக்கம் சமாதானத்திற்கு அழைத்துவிட்டு, இன்னொரு பக்கம், ரஷ்யா தாக்குதலை… அதுவும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தி உள்ளது.
இந்தத் தாக்குதலில் குடியிருப்புகள் குறிவைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 44 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் ஜெலன்ஸ்கி பதிவிட்டிருக்கிறார்.
ட்ரம்ப் முடிவு என்ன?
இந்தத் தாக்குதல் குறித்து நேற்று ட்ரம்ப், “ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து நான் கூடிய விரைவில் பேசுவேன். எனக்கு போர் குறித்து எதுவும் பிடிக்கவில்லை. இது அமைதி பேச்சுவார்த்தையை நிறுத்துகிறது.
ஆனால், அங்கு என்ன நடக்கிறதோ, அது எனக்கு ஆச்சரியமாக இல்லை.
போர் குறித்து பேச, சில ஐரோப்பிய தலைவர்கள் இந்த வாரத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவிற்கு வரலாம்” என்றும் பேசியுள்ளார்.
இந்தப் பேச்சுக்கு முன்பு, ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்க ரஷ்யாவின் மீது இரண்டாம் கட்ட வரி மற்றும் தடைகளை விதிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
ஏற்கெனவே வரி நெருக்கடிகளில் சிக்கியிருக்கும் புதின், ட்ரம்பின் எச்சரிக்கையை எப்படி சமாளிக்கப் போகிறார்… புதின் – ஜெலன்ஸ்கி சந்திப்பு நடக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…