
திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கீழரண் சாலையில் சத்தியமூர்த்தி நகர் உள்ளது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியைச் சேர்ந்த சிவா – சுகந்தி தம்பதியினருக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இதில் கடைசி பெண்ணான கார்த்திகா (வயது13). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று விடுமுறை என்பதால் தனது வீட்டருகே உள்ள பாட்டி வீட்டிற்குச் சென்றார். நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் மண் சுவர் மழைநீரில் ஊறிய நிலையிலிருந்தது.
இந்நிலையில், திடீரென மண் சுவர் சரிந்து கார்த்திகா மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி கார்த்திகா உயிருக்குப் போராடினார். மேலும், இந்தச் சம்பவத்தின்போது சுவர் அருகே நின்றிருந்த கொளஞ்சியம்மாள் (வயது 44) என்பவரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடி அபயக்குரல் எழுப்பினார்.
இவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளை அகற்றி, அவர்கள் இருவரையும் மீட்டனர்.
இருந்தபோதிலும் கார்த்திகா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொளஞ்சியம்மாளுக்குக் காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோட்டை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த சிறுமி கார்த்திகா உடலை மீட்டு உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காயமடைந்த கொளஞ்சியம்மாள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து கோட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்து சிறுமி இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.