
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
காரிருள் கொண்ட இரவை உவமையாக கூறலாம் மௌனத்திற்கு.
பிறவியிலேயே ஊமையா? இல்லை! பேச தெரியாத பிள்ளையா? இல்லை! பிறகு எதற்கு இப்படி ஒரு மௌனம்?
என்ன பேசுவது? எதை பேசுவது? எங்கு தொடங்குவது? எங்கு முடிப்பது? பேசினால் அது வீண் பேச்சாக முடிந்துவிட்டால்? இல்லை, பேசப் பேச வளவளவென்று பேசிவிட்டால்?சரி, இவற்றைக் கடந்து பேசிப் பாதியிலே, பேச நினைத்ததையே மறந்துவிட்டால்?
இவ்ளோ யோசிக்கிறதுக்கு பேசி தொலச்சாதான் என்ன ?
ஆம், ஒவ்வொரு முறை ஏதையாவது பேச நினைக்கும் பொழுதும் இப்படியான கேள்வி எழுந்துகொண்டே இருக்கும். நம் மனதிற்கு நெருக்கமானவர்களுடன் பேசும் பொழுது அல்ல பிறரிடம் திடீரென்று பேச நினைக்கும் பொழுது.
மனதிற்கு நெருக்கம்? அது யார்? “மனம்” என்பதற்கே இங்கு ஒரு உருவம் இல்லை. அவரவர் விருப்பத்திற்கேற்ப மனம் என்பதுடைய உருவகம் மாறுபடும்.
கடவுளைப் போல!
சிலருக்கு புத்தியில் தோன்றும் கேள்வி, பயமே ‘மனம்’ என்று கருதுவர்.சிலர் உள்ளுணர்வு உருவாகுவதே ‘மனம்’ எனக் கூறுவர். இவ்வாறு வேறுபாடுகள் உண்டு.
மனதிற்கே ஒரு தெளிவான விளக்கம் இல்லை, பிறகு என்ன மனதிற்கு நெருக்கமானவர்கள்?
நீங்கள் யாருடன் எதனைப் பற்றியும் யோசிக்காமல், அடுத்தவன் நம்மை ஒரு தராசில் வைத்து எடை போட மாட்டான். பொங்கி வரும் நீரோட்டத்தைப் போல அனைத்தையும் கூற முடிகிறதே அவர்களே… சரி, பிறரிடத்தில் பேச நினைக்கும் போது எனக்கு ஏன் இப்படியான குழப்பம்? தயக்கம்? ஆகப் பேசுவதில் நமக்குத் தயக்கமும் இல்லை, கலக்கமும் இல்லை, குழப்பமும் இல்லை, பயமும் இல்லை. இதை இவனிடம் பேசினால் என்ன ஆகும் என்ற யோசனைதான்.
“இல்ல நான் சொல்லிர்ப்பேன், நீ தப்பா நெனச்சுடா என்ன பண்றது?” இதையை நாம் அனைவரும் நம்மிடம் நெருக்கமானவர்களிடம் கேட்டிருப்போம்.. உண்மையிலேயே நெருக்கமானவர்கள் என்று இருக்கையில், ஏன் அவர்களைத் தவறாக எடுத்துக் கொள்ளப் போகிறோம்?”
காரணம் இருக்கிறது..
ஆங்கிலத்தில் “To err is human” என்று ஒரு பழமொழி உண்டு. அதை விட நம் தமிழில் அழகாகக் கூற வேண்டுமென்றால், “குற்றம் பாக்கின் சுற்றம் இல்லை”.
அனைத்திலும் மிகச் சரியாக ஒருவரால் இருந்து விட முடியவே முடியாது. மனிதன் மட்டும் என்ன விதி விலக்கு? ஏதாவது தவறு நடந்துவிட்டால், அதனை ஏற்றுக்கொண்டு அவர்களை அக்கறையோடு அணைத்துக்கொள்ளும் எண்ணம் நமக்குள் குறைந்து விட்டதோ எனத் தோன்றுகிறது. தவறு செய்வது மனித இயல்பு. அதை புரிந்து, நம்முள் மனிதமும், மனிதநேயமும் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் மௌனம் மிகக் கணமான ஒன்று . சொல்ல முடியாத பெரிய சோகத்தைச் சூழ்ந்து நடுக்கடலில் தத்தளிக்கும் நிலையைப் போன்றதாக இருக்கும். சிலரால் வெளியில் சொல்ல முடியாமல் போனாலும், அவர்களைப் போன்றவர்களுக்கு ஆறுதலாக ஒரு புன்முறுவலுடன் நாம் இருந்தாலே போதும்.
“கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை” என்பர். உண்மை.
இன்றைய காலத்தின் சூழ்நிலைக்கேற்பச் சொல்ல வேண்டுமென்றால், “கொடிது கொடிது மௌனம் கொடிது அதனினும் கொடிது இளமையில் மௌனம்”. உங்களால் ஒருவர் ஏன் மௌனமாக இருப்பதை யூகிக்க முடியாது. சிலருக்கு அது சோகமாக இருக்கலாம்; சிலர் சமூகத்தால் தான் ஒடுக்கப்பட்டவராக நினைக்கலாம்,
சிலருக்கு வெளியில் எப்படி வெளிப்படுத்துவது என்ற எண்ணத்தில் இருக்கலாம். இத்தகைய கொடியது மௌனம். இதைவிட மிகப் பெரிய சோகம் உள்ளது, முதுமையில் மௌனம். கேட்க ஒரு நாதி இருக்காது. அவர்களின் மௌனம் ஒருபொருட்டுட்டாகவே இருக்காது மற்றவர்களுக்கு.
அவர்கள் எவ்வளவு பேசினாலும் நமக்கு தொடர்பு கொள்ள முடியாது. அதனால் அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ணுவோம். அவர்களும் அதை புரிந்து கொண்டு அமைதி ஆகி விடுவார்கள்.
சரி, மௌனம் என்பது சோகத்தின் வெளிப்பாடு மட்டும்தானா ; மௌனமாக இருக்கிறவர்களின் வாழ்க்கை இருண்டு போன ஒன்றா? இதற்கு வேறு ஒரு கோணமும் உள்ளது. மற்றொரு கோணத்தில் அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியானது; நீங்கள் அவர்களை எவ்வளவு கடிந்து கொண்டாலும், போற்றினாலும் தூற்றினாலும் அவர்களிடமும் எந்த பதிலும் வராது. நீங்கள் ஒரு பொருட்டாகவே இருக்கமாட்டீர்கள் அவர்கள் உலகத்தில். அவர்கள் எண்ணத்தில் தோன்றியதையே சொல்லாமல் அமைதியாக இருப்பவர்கள், உங்களுடைய பழிக்கும் வீண்பேச்சுக்கும் பதிலாக சொல்லப் போகிறார்கள்? “இவர்களுக்கு எத்தகைய சுழலையும் கையாள தெரியும்.

சிலருக்கு தனியாக வெளியில் செல்ல வேண்டுமென்றாலே தயக்கம் இருக்கும்; பேச்சுத்துணைக்கு ஒருவராவது வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், மௌனமாகவே இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்சினையே இல்லை. மௌனத்தின் அமைதியிலேயே முத்துகளை எடுத்தவர்களே அவர்கள்; கடலின் ஆழத்தில் சென்று முத்து எடுப்பது போல! ஒரு விஷயத்தை யோசிக்கத் தொடங்கி, ஒன்றின் பின் ஒன்றாக யோசனையின் ஒட்டத்தில் புத்தி சென்று, மனக்கோட்டையின் வழியாக முழு உலகையும் சுற்றி வருபவர்கள் அவர்கள்.
அவர்களின் வாழ்வில் துயரமோ மகிழ்ச்சியோ எதுவாக இருந்தாலும் அதன் ஆழத்திற்கு சென்று வந்திருப்பார்கள் இவர்கள். ஆகையால், இவர்களை நீங்கள் கோபப்படுத்த நினைத்தாலும், சோகத்தில் ஆழ்த்த நினைத்தாலும் அது முடியாது. ஏனெனில் அனைத்தையும் மௌனத்தின் வழியே அனுகுபவர்கள். வாயால் பேசவும் மாட்டார்கள், முகத்தில் எந்த உணர்வையும் வெளிப்படுத்தவும் மாட்டார்கள்.
“The most dangerous man in the room is often the silent one” என்று ஒரு கூற்று ஆங்கிலத்தில் உள்ளது. மௌனத்தின் ஆழம் பெரியது. இருவர் பேசும்போது மூன்றாவதாக ஒருவர் அமைதியாக இருந்தால், அவர் அந்த இருவர் பேசுவதைக் கவனித்து கொண்டு இருக்கிறார் என்ற அர்த்தம். இந்த இருவர் ஒருவன் கேட்கும் கேள்வியை எப்படித் தாங்கிக் கொள்வது என்பதையே சிந்தித்துக் கொண்டிருப்பான். மௌனமாக இருப்பவனோ, இருவரும் என்ன யோசிக்கிறார்கள், அவர்கள் கூறுவது உண்மையா பொய்யா, வேறு என்ன கோணம் உள்ளது, ஏன் இப்படிப் பேசுகிறார்கள் என ஆயிரம் கணக்கில் சிந்தித்திருப்பான். நீங்கள் யூகிக்க முடியாதவற்றையெல்லாம் இவன் கூறிவிடுவான். மௌனத்திற்கு இப்படியான வலிமையும் உண்டு.
ஆக மௌனம் சிலருக்கு சோகத்தின் வெளிப்பாடு, சிலருக்கு பிரச்சனையின் வெளிப்பாடு, சிலருக்கு தனிமையின் வெளிப்பாடு, சிலருக்கு வலிமையின் வெளிப்பாடு.
அமைதியாக உலகை உற்று நோக்கும் மௌனம், ஒரு தனித்துவமான அழகே!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!