
சிலருக்கு வயது என்பது ஒரு எண் மட்டும்தான்போல… ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 102 வயதான முதியவர் ஒருவர், ஜப்பானின் உயரமான ஃபுஜி மலையில் வெற்றிகரமாக ஏறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
இவருடைய பெயர் கோகிச்சி அகுசாவா (Kokichi Akuzawa). தன்னுடைய 70 வயது மகள், பேத்தி, பேத்தியின் கணவர் மற்றும் உள்ளூர் மலையேற்ற கிளப்பைச் சேர்ந்த நான்கு நண்பர்களுடன், ‘ஃபுஜி மலையில் ஏறிய உலகின் வயதான நபர்’ என்கிற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். சுமார் 3,776 (12,388 அடி) மீட்டர் உயரம் கொண்ட ஃபுஜி மலை, அந்நாட்டின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த மலை ஆன்மிகம் மற்றும் கலாசார முக்கியத்துவம் மிகுந்தது. அதனால், வருடந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள், பக்தியோடு இந்த மலையில் ஏறுகின்றனர்.
‘கோகிச்சி அகுசாவா’ நல்ல ஓவியர். சிறுவயதில் மலைச்சிகரங்கள் தன்னை அழைத்ததாக சொல்கிறார். அகுசாவா ஓர் இயந்திர வடிவமைப்பு பொறியாளராகவும், பின்னர் கால்நடை செயற்கை கருவூட்டலாளராகவும் பணியாற்றினார். அவர் 85 வயது வரை இந்தத் தொழிலை செய்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். ஒரு காலத்தில் அகுசாவா தனியாக மலையேறுவதை ரசித்ததாகவும், ஆண்டுகள் செல்லச் செல்ல அவரது வலிமை குறைந்து வருவதால், மற்றவர்களுடன் மலையேற ஆரம்பித்தாகவும் அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
தவிர, இந்தப் பயணம் அகுசாவாவின் முதல் சாதனைப் பயணமல்ல. அவர் 96 வயதிலும் நாட்டின் மிகவும் பிரபலமான மலையில் ஏறிய முதல் வயதான நபர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். அதன் பிறகான ஆறு ஆண்டுகளில் அவருக்கு இதயப் பிரச்னை ஏற்பட அதிலிருந்து மீண்டு, ஃபுஜி மலையில் ஏறுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து ஒரு மணி நேர நடைப்பயணம், ஒவ்வொரு வாரமும் கொஞ்சம் கொஞ்சமாக மலையில் ஏறியும் பயிற்சி செய்திருக்கிறார்.

ஃபுஜியில் ஏறி சாதனையை செய்த பிறகு, ”மலையுச்சியை அடைவது இந்த முறை எனக்குக் கடினமாக இருந்தது. பாதியிலேயே இறங்கிவிடலாம் என்றுகூட யோசித்தேன். ஆனால், உடன் வந்த குடும்பத்தினரும், நண்பர்களும் ஊக்கப்படுத்தியால் என்னால் இந்த சாதனையை செய்ய முடிந்தது” என்றிருக்கிறார். தற்போது அகுசாவா தன்னுடைய நாள்களை ஒரு முதியோர் பராமரிப்பு மையத்தில் தன்னார்வத்தொண்டு செய்வதிலும், தனது வீட்டு ஸ்டுடியோவில் ஓவியம் கற்பிப்பதிலும் செலவிட்டு வருகிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR