
இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிவேக சதம் (30 பந்துகளில்), அதிக சிக்ஸர் (357), ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் (17), ஒரு போட்டியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் (175 நாட் அவுட்) ஆகிய முறியடிக்க முடியாத சாதனைகளுக்குச் சொந்தக்காரர் கிறிஸ் கெயில்.
2009-ல் கொல்கத்தா அணியில் தனது ஐ.பி.எல் கரியரைத் தொடங்கிய கெயில், 2011 முதல் 2017 வரை பெங்களூரு அணிக்கு மட்டுமல்லாது ஐ.பி.எல்லுக்கே அதிரடி முகமாக ஜொலித்தார்.
அதன்பின்னர், 2018 முதல் 2021 வரை பஞ்சாப் அணியில் விளையாடினார். பஞ்சாப் அணியில் முதல் 3 ஆண்டுகள் அவருக்கு சிறப்பான சீசன்களாக அமைந்தாலும், 2021 சீசன் அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை.
அந்த சீசனில் ஒரு அரைசதம் கூட அடிக்காத கெயில் வெறும் 193 ரன்கள் மட்டும்தான் குவித்தார்.
இறுதியில் எதிர்பாராத விதமாக 2021 சீசனே அவரின் ஐ.பி.எல் கரியரின் கடைசி சீசனாக அமைந்தது.
இந்த நிலையில், தான் கடைசியாக ஆடிய பஞ்சாப் அணியில் தான் அவமதிக்கப்பட்டதாக கெயில் தற்போது பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.
சுபங்கர் மிஸ்ராவுடனான பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இதனை வெளிப்படுத்திய கெயில், “பஞ்சாப் அணியுடனான என் கரியர் முன்கூட்டியே முடிந்துவிட்டது. பஞ்சாப் அணியில் நான் அவமரியாதை செய்யப்பட்டேன்.
இந்த லீக்கில் சிறப்பாக விளையாடி, அணிக்கு மதிப்பு சேர்த்த ஒரு சீனியர் வீரர் என்ற முறையில் என்னைச் சரியாக நடத்தவில்லை.
நான் மனச்சோர்வடைந்த மனநிலையில் இருப்பது போல் உணர்ந்தேன். என் வாழ்வில் முதல்முறையாக அப்படி உணர்ந்தேன்.

பணத்தை விடவும் உங்களின் மன ஆரோக்கியம் முக்கியம். மும்பைக்கெதிரான கடைசி ஆட்டத்துக்குப் பிறகு எனக்குள்ளேயே மிகவும் உடைந்துபோயிருந்தேன்.
அதனால், அனில் கும்ப்ளேவை (அப்போது பஞ்சாப் பயிற்சியாளர்) அழைத்துப் பேசினேன்.
மனதளவில் நான் மிகவும் காயமடைந்திருந்ததால் உண்மையில் அவர் முன் உடைந்துவிட்டேன். அணியிலிருந்து வெளியேறுகிறேன் என்று கூறிவிட்டேன்.

அந்த நேரத்தில் அனில் கும்ப்ளே மற்றும் அணி செயல்பட்ட விதம் கண்டு ஏமாற்றமடைந்தேன்.
அப்போது கேப்டனாக இருந்த கே.எல். ராகுல் என்னை அழைத்து, ‘நீங்கள் இருங்கள், அடுத்த போட்டி ஆடுவீர்கள்’ என்று கூறினார்.
நான், வாழ்த்துகள் கூறிவிட்டு வெளியேறிவிட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.