
மதிமுக – மல்லை சத்யா!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான வைகோவுக்கும், மதிமுக-வின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே கடந்த நில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வந்தது.
தொடர்ந்து வைகோவை தலைவர் என அழைத்து வந்த மல்லை சத்யா, வைகோவின் மகன் துரை வைகோவைக் கடுமையாக விமர்சித்து வந்தார்.
வைகோ தன் மகனின் அரசியல் வாழ்க்கையை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படுவதாகக் குற்றச்சாட்டினார். அப்போதே, “மதிமுக மாயமானை நம்பி மண் குதிரையை நம்பி பயணித்த கதையாகி, தீக்குளித்த தியாகிகளின் ஈகம் வீணாகி மறுமலர்ச்சி விலகி மகன் திமுக என்று திரிபுவாத இயக்கமாகச் சுருங்கிப் போனது துரதிருஷ்டம்.
ம.தி.மு.க நிச்சயமாக தலைவர் வைகோவின் கட்டுப்பாட்டில் இல்லை. அப்படி இருக்குமானால், மாவட்டச் செயலாளர்கள் நீக்கமோ, என் மீதான அபாண்ட பழிச்சொல்லோ வந்திருக்காது. இப்போது நடப்பவை, ம.தி.மு.க தலைவர் கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்கான சான்று.
நாங்கள் கருத்தில் ரீதியாகவே திராவிட சித்தாந்தத்தில் வளர்ந்தவர்கள். எனக்கும் தலைவர் வைகோவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு துரை வைகோவால் உருவாக்கப்பட்டது.
செப்டம்பர் 15 அண்ணாவின் பிறந்த நாளை காஞ்சிபுரத்தில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். அதில் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்” என்றார்.
தகுதி நீக்கம்:
இந்த நிலையில்தான் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக மதிமுக தலைவர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையின் ஒரு பகுதியில், “கழகத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கும் தங்களை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட திட்டங்கள் பிரிவு 19 விதி 35, பிரிவு 14 விதி 35, பிரிவு 15-ன் படி துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட கழகத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியிலிருந்து நிரந்தரமாக நீக்கி அறிவிக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.