
ராணிப்பேட்டையில், பாலாறு – பொன்னை ஆறு சங்கமிக்கும் படுகையையொட்டி, ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருந்திருக்கிறது `நவ்லாக்’ அரசுப் பண்ணை (State Horticulture Farm – Navlock). நவாப் ஆட்சிக்காலத்தில், பழவகைகள் உட்பட 9 லட்சம் பயன் தரும் மரங்களுடன் இந்தப் பண்ணை உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளப்பட்ட நவ்லாக் பண்ணை மேல்பண்ணை, நடுப்பண்ணை, கீழ்ப்பண்ணை என மூன்று வகையாகப் பிரித்து, பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும், போதிய பாதுகாப்போ, முறையான பராமரிப்போ இல்லாத காரணத்தால், தனது அடையாளத்தையே இழந்து உருக்குலைந்து கிடக்கிறது `நவ்லாக்’ பண்ணை.
இந்த நிலையில், நேற்று இரவு 10.30 மணியளவில், தென்னை ஒட்டு மையமாகச் செயல்படும் நடுப்பண்ணை பகுதி வழியாக பைக்கில் வீடு திரும்பிய இளம் காதல் ஜோடியை மடக்கிய 3 இளைஞர்கள், காதலனை தாக்கிவிட்டு, 19 வயது இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுவிட்டு தப்பிஓடியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட இளம்பெண் வீடு திரும்பிய நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையம் சென்று புகாரளித்திருக்கின்றனர்.
எஸ்.பி அய்மன் ஜமால் உத்தரவின்பேரில், தேடுதல் வேட்டையில் இறங்கிய தனிப்படை போலீஸார், வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அவரக்கரைப் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களை கைது செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. விசாரணை நடைபெற்று வருவதால், `இந்தச் சம்பவம் பற்றிய விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்’ என காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த வன்கொடுமை விவகாரம் குறித்து, அ.தி.மு.க-வின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சுகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “சிப்காட் காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட அவரக்கரை பகுதியில் இளம்பெண் ஒருவரை 3 கயவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள செய்தி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த கொடிய சம்பவத்தை மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன். தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், `தன்னை அப்பா’ என அழைப்பதாகவும் கூறும் முதலமைச்சர் அவர்களே, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வேதனை, அழுகுரல் கேட்கவில்லையா? விடியா தி.மு.க அரசில் நாள்தோறும் தமிழ்நாடு முழுவதும் பெண்கள் தொடர்ந்து பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வரும் நிலையில், இந்த கொடிய தவறிழைத்த கயவர்கள் மீது `குண்டர் சட்டம்’ உள்ளிட்ட கடுமையான சட்டங்களின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார் எஸ்.எம்.சுகுமார்.