
தேனி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும். அச்சாலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார்ப் பள்ளி போன்றவை அமைந்திருக்கின்றன.
மதுரை, போடி, கம்பம் போன்ற ஊர்களுக்குச் செல்லும் முக்கிய சாலையாகவும் இருக்கிறது. இந்தச் சாலையில் ரயில்வே கிராசிங்க் இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை வேளையில் ரயில்வே கேட்டுகளின் அருகே பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.
கேட்டைத் திறந்தாலும் சாலையைக் கடப்பதற்கே அரை மணி நேரமாகும். இந்த நெரிசலைச் சமாளிக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் பங்களா மேட்டிலிருந்து 1.26 கிலோமீட்டர் தூரத்திற்கு 92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
பாலத்தின் தொடக்கத்திலும், இறுதியிலும் பணிகள் நிறைவடைந்த நிலையில் முக்கியமான இடமான ரயில் பாதையின் மேலே இன்னமும் பாலம் அமைக்காமல் அந்தரத்தில் நிற்கிறது மேம்பாலம். இதனால் முன்பைவிட கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு மண் புழுதியும் ஏற்பட்டு, இந்தப் பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.
இந்தப் புகையினால் அந்தச் சாலை கடந்து செல்லும் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் வாகன ஓட்டிகள், கடை வைத்திருக்கும் மக்கள் என எல்லோரும் பாதிக்கப்படுகிறார்கள்.
இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களிடம் கேட்டபோது, “இந்த இடத்தைக் கடந்து செல்வதற்குப் பயந்தே சுற்றுப்பாதையில் சென்று விடுவேன். ரயில் போன பின்பும் இங்கே இருந்து நகர முடியாது” என்று கூறினார்.

இது குறித்து பேருந்து ஓட்டுநரிடம் கேட்டபோது, “இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் சரியான நேரத்தில் எங்களால் செல்லமுடியாது. அதனால் சாப்பிட நேரமில்லாமல் போகும். கடந்து செல்வதே மன அழுத்தத்தைத் தருகிறது” என்றனர். தினசரி ஆட்டோ ஓட்டுநர்களும் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள்.
அங்கிருந்த சில ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேசும்போது, “எங்களுக்கு இங்கு வருமானமே இல்லை. புழுதியினால் சுவாச பிரச்னைகள் ஏற்படுகிறது. புழுதியைச் சமாளிக்க சில இடங்களில் தண்ணீர் தெளிப்பார்கள். ஆனாலும் அதைச் சமாளிக்க முடிவதில்லை. போக்குவரத்து நெருக்கடியால் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் செல்லக் கூட வழி இல்லாமல் மாட்டிக்கொள்கிறது. இந்த மேம்பாலப் பணிகள் முடிந்தால் மட்டுமே எங்களின் நிலைமை மாறும்” என்று கூறினார்கள்.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறையினரிடம் விளக்கம் கேட்ட போது, “ரயில் பாதையின் மேல் பாலம் கட்டுவதற்கு உலோகக் கட்டமைப்பு வேலைகள் நடைபெற்று வருவதால், அவற்றை ரயில்வே பொறியாளர்கள் தரநிலைப்படி பரிசோதித்து வருகின்றனர்.
இந்த வேலைகள் முடிந்ததும் பாலம் கட்டும் பணிகள் சீக்கிரமாக முடிவடைந்து விடும்” என்றனர்.