
இந்தியாவின் தென் எல்லையான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் சார்பில் படகு இயக்கப்பட்டு வருகிறது. முதலில் விவேகானந்தர் நினைவு பாறைக்குச் செல்லும் படகு பின்னர் அங்கிருந்து பயணியரை ஏற்றிக்கொண்டு திருவள்ளுவர் சிலைக்குச் செல்வது வழக்கமாக இருந்தது. திருவள்ளுவர் சிலைக்குச் செல்லும் பகுதியில் பாறைகள் அதிகமாக உள்ளதால் கடல் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் சில நேரங்களில் படகு இயக்க முடியாத நிலை ஏற்பட்டுவந்தது. இதையடுத்து விவேகானந்தர் நினைவுப்பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே 77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் 37 கோடி ரூபாய் செலவில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 222 டன் எடைகொண்ட கண்ணாடி பாலம் 101 பாகங்களாக பிரித்து படகில் கொண்டு சென்று பொருத்தப்பட்டது. கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை ஒட்டி வெள்ளிவிழா கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் கண்ணாடி கூண்டு பாலத்தை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பாலத்தில் நடந்து சென்று இயற்கை அழகை கண்டுகளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
கண்ணாடி பாலம் திறக்கப்பட்ட பிறகும் பராமரிப்பு பணிகள் என அவ்வப்போது மூடப்பட்டு வந்தது. சர்வதேச சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கண்ணாடி பாலத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கடந்த சில நாட்களாக கண்ணாடி பாலத்தில் குவிந்தனர். கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையிலும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருவதால் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கண்ணாடி பாலம் அவசர கதியில் அமைக்கப்பட்டதால்தான் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுவந்த நிலையில் கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதியே அந்த விரிசல் உள்ளது. சுத்தியல் விழுந்ததால் அந்த விரிசல் ஏற்பட்டது. அதனால் பாலத்துக்கோ, சுற்றுலா பயணியருக்கோ எந்த ஆபத்தும் இல்லை. அந்த கண்ணாடிக்கு பதிலாக புதிய கண்ணாடி குஜராத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. சில நாட்கள் மின்சார இணைப்பில் பிரச்னை இருந்துவந்ததால் புதிய கண்ணாடியை மாற்றுவதற்கு தாமதம் ஆகிவிட்டது. ஜெனரேட்டர் உதவியுடன் இன்று இரவு அந்த கண்ணாடி மாற்றப்பட உள்ளது” என்றார்.