
ஜப்பானின் பிரதமர் ஷிகெரு இஷிபா, ஆளும் லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியின் (LDP) தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பரில் பதவியேற்றதில் இருந்து ஷிகெரு இஷிபா தொடர்ச்சியாக தேர்தல் தோல்விகளை சந்தித்து வருகிறார். கடந்த ஜூலையில் LDP மேலவை தேர்தலில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
விலைவாசி உயர்வால் ஏற்பட்ட வாக்காளர்களின் அதிருப்தியே இந்த தோல்விகளுக்கு முக்கிய காரணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை
தன் சொந்தக் கட்சியினரின் ராஜினாமா கோரிக்கைகளை ஷிகெரு இஷிபா தொடர்ந்து நிராகரித்து வந்தார். மேலும், ஜப்பானின் வாகனத் துறையை பாதித்த அமெரிக்க வர்த்தக வரிகள் குறித்த வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளித்து வந்தார். அரசியல் நிச்சயமின்மை காரணமாக ஜப்பானிய பங்குச் சந்தைகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளன. யென் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.
கடைசி நடவடிக்கை
பிரதமராக இஷிபாவின் கடைசி முக்கிய நடவடிக்கை, கடந்த வாரம் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டதாகும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஜப்பான் $550 பில்லியன் முதலீட்டுக்கு உறுதியளித்தது. இதற்கு பதிலாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜப்பானின் வாகன ஏற்றுமதி மீதான வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில்தான் அவர் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்தும் விலக உள்ளதாக ராய்ட்டர்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த பிரதமர் யார்?
சனாய் தகாய்ச்சி:
கடந்த ஆண்டு கட்சித் தலைமைத் தேர்தலில் இஷிபாவுக்கு நெருங்கமான வாக்கு சதவிகிதத்தில் தோல்வியடைந்த அவர், வலுவான போட்டியாளராக கருதப்படுகிறார். ஜப்பான் வங்கியின் வட்டி உயர்வுகளை விமர்சித்து, விரிவான நிதிக் கொள்கைகளுக்கு தொடர்ந்து வாதிட்டு வருகிறார்.
ஷின்ஜிரோ கோய்சுமி:
உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் உள்ள வேளாண்மை அமைச்சர். முன்னாள் பிரதமர் ஜுனிச்சிரோ கோய்சுமியின் மகன்.