
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
50, 60களில் பிறந்த தமிழ்குடி மகன்களின் உற்ற நண்பன் விகடன் என்ற தலைப்பில் திரு. சுவாமிநாதன் எழுதிய கட்டுரை படித்தேன்.
படித்ததும் 1961 இல் பிறந்த எனக்கு அவர் சொல்லாமல் விட்ட, என் நினைவில் நிற்கும் சிலவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விருப்பம் ஏற்பட்டது.
அக்காலத்தில் விகடனில் மணியன், மெரினா (இவரே ஸ்ரீதர் மற்றும் பரணீதரன்), தாமரை மணாளன், மதன் போன்ற ஜாம்பவான்கள் பணியாற்றினர். சிவசங்கரி, வாசந்தி, இந்துமதி இவர்களின் கதைகள் நிறைய வந்தன.
மெரினவின் ஊர்வம்பு, தனிக்குடித்தனம், மாப்பிளை முறுக்கு போன்ற நாடக வடிவிலான தொடர்கள் சுவாரஸ்யமாக இருக்கும்.
சிவசங்கரியின் பாலங்கள் மூன்று தலைமுறைக் கதை.
மணியனின் love birds வயசு பொண்ணு என்ற பெயரில் திரைப்படம் ஆனது. மோகம் முப்பது வருஷம் அதே பெயரில் வந்தது. தாமரை மணாளன் எழுதிய ஆயிரம் வாசல் இதயம், மெரினாவின் தனி குடித்தனம் அதே பெயர்களில் திரைப்படங்கள் ஆயின. தரையில் இறங்கும் விமானங்கள் டிவி தொடராக வந்தது.
1978 ஆம் ஆண்டு தீபாவளி அன்று தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக ஒரே நாளில் 11 திரைப்படங்கள் வெளியாகி அனைத்தும் வசூல்ரீதியாக வெற்றி பெற்றன. ஒரே இதழில் அனைத்து படங்களுக்கும் மதிப்பெண் கொடுத்து விமர்சனம் செய்து அசத்தினார் விகடனார்! சிவப்பு ரோஜாக்கள், தப்பு தாளங்கள், வண்டிக்காரன் மகன் ஆகிய படங்கள் முதல் மூன்று இடங்களை பெற்றன.
பரணீதரனின் புண்ணிய பாரதம் நம் நாடு முழுவதும் உள்ள திருத்தலங்களை மானசீகமாக தரிசிக்க வைத்தன. மணியன் உலக நாடுகளை அறிமுகம் செய்தார். வீயெஸ்வியின் சங்கீத சீசன் கட்டுரைகள் சுவாரஸ்யமாக இருக்கும்.
மதன் கார்ட்டூன்களுக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. அவரது ரெட்டை வால் ரெங்குடுவையும் மியூசியத்தில் இருக்கும் பீரங்கியை கூட முன்னால் செல்லாமல் பின்னால் சுற்றி கொண்டு போகும் முன் ஜாக்கிரதை முத்தண்ணா வையும் வீட்டு புரோக்கர் புண்ணியகோடியையும் மறக்க முடியுமா?
விகடன் தலையங்கங்களும் ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்ப்பவை. 1986-87 வாக்கில் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரி சுறுசுறுப்புடன் பணியாற்றி ஆக்கிரமிப்பு களை தைரியமாக அகற்றினார். விளைவு? அதிகாரம் இல்லாத ஒரு பதவிக்கு மாற்றப்பட்டார். விகடன் தலையங்கம் எழுதி “சுறுசுறுப்புடன் பணியாற்றிய அதிகாரி அந்த சுறுசுறுப்புக்கு அவசியம் இல்லாத டல் பதவிக்கு மாற்றப்பட்டது ஏன்?” என்று தட்டி கேட்டது நினைவில் உள்ளது.
எம்ஜிஆர் மறைந்தவுடன் தலையங்கத்தில் “உலகத்தின் சரித்திரத்தில் ஒரு எம்ஜிஆர்தான் தோன்ற முடியும் ” என்று குறிப்பிட்டது விகடன்.
70களின் ஆரம்பத்தில் மாவட்ட மலர் வெளியிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறப்புகளையும் அந்த வட்டார பழக்க வழக்கங்களையும் அனைவரும் அறிய செய்தது விகடன். (அப்போது 14 மாவட்டங்கள்தான்) 70களின் இறுதியில் கல்லூரி மாணவர்களை பத்திரிகையாளர்கள் ஆக்கி ஊக்குவித்தது விகடன்.
விகடன் வந்தவுடன் போட்டி போட்டுக் கொண்டு படித்தது சுமார் 45-50 ஆண்டுகள் கழித்தும் நினைவில் நிற்கிறது.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!