
பீகார் சட்டமன்றத் தேர்தல்:
பீகார் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கிறது. அதற்கான பணிகளை ஆளும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடங்கிவிட்டன.
243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலில் இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் இதே கூட்டணி தொடரும் என பா.ஜ.க உறுதியாக நம்புகிறது.
அதே நேரம், தொகுதிப் பங்கீடு, மக்களிடம் செல்வாக்கு செலுத்துவது போன்ற விவகாரங்களில் கூட்டணிக்குள் அவ்வப்போது சில சலசலப்புகளும் எழுகின்றன.
கூட்டணி சலசலப்பு:
2020-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 110 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 115 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் பா.ஜ.க 74 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
விகாசீல் இன்சான் கட்சி 4 தொகுதிகள், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 4 தொகுதிகள் என அனைத்தையும் சேர்த்து கூட்டணி ஆட்சி அமைத்தார் நிதிஷ் குமார். அதனால், இந்த தேர்தலில் தன்னுடைய பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் பேசிய நிதிஷ் குமார், “இந்த தேர்தலில் பா.ஜ.க-வை விட ஒரு தொகுதியாவது அதிகம் பெற்றுவிட வேண்டும்” எனப் பேசியது, கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி ஸ்திரமின்மை:
2020 தேர்தலில் பா.ஜ.க-வுடன் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்த நிதிஷ் குமார், ஆகஸ்ட் 2022-ல் அக்கூட்டணியில் இருந்து விலகி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைமையிலான ‘மகாபந்தன்’ கூட்டணியுடன் இணைந்தார்.
பின்னர், ஜனவரி 2024-ல் மீண்டும் ‘மகாபந்தன்’ கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து ஆட்சி அமைத்தார்.
இந்த தொடர்ச்சியான கூட்டணி மாற்றங்கள், அவரின் அரசியல் ஸ்திரத்தன்மையில்லை என்பதை உறுதி செய்கிறது. எனவே, இந்த முறையும் அவரது செயல்பாடுகள் சந்தேகத்துடன் அணுகப்பட வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளதாக பா.ஜ.க வட்டாரங்களில் பேசத் தொடங்கிவிட்டனர்.
வேட்பாளர் அறிவிப்பு:
இதற்கிடையில், பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து என்.டி.ஏ கட்சிகளுடன் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்காத நிலையில், ராஜ்பூர் தொகுதிக்கான வேட்பாளரை நிதிஷ் குமார் அறிவித்திருக்கிறார்.
கடந்த சனிக்கிழமை (6-ம் தேதி) பீகார் மாநிலம் பக்சரில் நடந்த கட்சிக் கூட்டத்தில், மூத்த பா.ஜ.க தலைவரும், துணை முதல்வருமான சாம்ராட் சவுத்ரி மேடையில் இருக்கும் போதே நிதிஷ் குமார், பீகாரின் முன்னாள் அமைச்சர் சந்தோஷ் குமார் நிராலாவை, பட்டியலினத்துக்கான (SC) ஒதுக்கீடு தொகுதியான ராஜ்பூருர் தொகுதிக்கு வேட்பாளராக அறிவித்தார்.
2020-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் விஸ்வநாத் ராமிடம் சந்தோஷ் குமார் நிராலா தோல்வியைத் தழுவியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
சலசலப்புக்கு பதில்:
கூட்டணிக் கட்சித் தலைவர் மேடையில் இருந்தபோதே, கூட்டணிக் கட்சிகளிடம் எந்த ஆலோசனையும் இல்லாமல் சுயமாக வேட்பாளரை அறிவித்தது, கூட்டணிக்குள் உள்ள பதற்றத்தை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
இதனைப் பற்றி விளக்கம் அளிக்கும் வகையில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் பேசிய நிதிஷ் குமார் கூறியதாவது: “நாங்கள் ராஜ்பூரில் போட்டியிடுகிறோம் என்பது உறுதி. 2020 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைவதற்கு முன்பு, சந்தோஷ் குமார் நிராலா இரண்டு முறை அந்தத் தொகுதியில் வென்றுள்ளார்.
எனவே ராஜ்பூர் தொகுதியில் வரவிருக்கும் தேர்தலுக்கான வேட்பாளர் அவர்தான். கட்சிக் கூட்டத்தில் தொண்டர்களுக்கு முன்பு சந்தோஷ் குமார் நிராலாவை வேட்பாளராக அறிவிப்பது பொருத்தமானது எனக் கருதி அறிவித்தேன்,” என்றார்.
அமைதி காக்கும் பா.ஜ.க:
நிதிஷ் குமாரின் இந்த செயல்பாடு பா.ஜ.க தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்,
பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் மனோஜ் சர்மா கூறியதாவது: “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் நிதிஷ் குமார் தனது சிறப்புரிமையைப் பயன்படுத்தி, ஜே.டி.யு கட்சியால் பாரம்பர்யமாக போட்டியிடும் ஒரு தொகுதியில்தான் வேட்பாளரை அறிவித்துள்ளார்.
தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்க இன்னும் சில தினங்கள் மட்டுமே இருக்கின்றன,” என்றார்.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை:
செப்டம்பர் 9-ம் தேதி துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. அந்த தேர்தலுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் பீகாரின் சட்டமன்றத் தேர்தலுக்காக என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய வாய்ப்புள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிதிஷ் குமாரின் ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க சம எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிட ஒப்புக் கொண்டாலும், சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), HAM (S) மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்சா (RLM) போன்ற கூட்டணிக் கட்சிகள் தங்களுக்கு அதிக இடங்களைப் பெற வேண்டும் என்பதில் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.