
சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே பணி நிரந்தரம் வேண்டிய போராடிய 13 பெண் தூய்மைப் பணியாளர்கள் இப்போது, கொருக்குப்பேட்டையில் அவரவர் வீடுகளில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே மாநகராட்சி மண்டலங்கள் 5, 6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் தனியார்மயத்தை எதிர்த்தும் பணிநிரந்தரம் வேண்டியும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் போராடியவர்களை ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் காவல்துறையினர் கைது செய்தனர். ஆகஸ்ட் 14 ஆம் தேதி மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். தனியார்மயத்துக்கு எதிராக தூய்மைப் பணியாளர்கள் சார்பில் உழைப்போர் உரிமை இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு விசாரணையில் இருக்கிறது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதியன்று சிந்தாதிரிப்பேட்டையின் மே தினப் பூங்காவில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்க சுமார் 300 பெண் தூய்மைப் பணியாளர்கள் கூடினர். அங்குக் கூடிய தூய்மைப் பணியாளர்களையும் காவல்துறையினர் கூண்டோடு கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

இந்நிலையில், சென்னை கொருக்குப்பேட்டை இந்திரா நகரில் 13 பெண் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் வீட்டருகிலேயே பணிநிரந்தரம் வேண்டி உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, போராடி வரும் பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
‘நாங்கள் அறவழியில் எங்களின் கோரிக்கைகளை முன்வைத்து அமைதியாகப் போராடுகிறோம். ஆனால், காவல்துறையினர் எங்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்ய முயற்சி செய்கின்றனர்’ எனப் போராட்டக்குழு தரப்பில் கூறுகின்றனர். போராடியவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர்.