
லால்பாக் ராஜா விநாயகர் சிலை
மும்பையில் விநாயகர் சதுர்த்தியின் இறுதி நாளான ஆனந்த சதுர்த்தி இந்த ஆண்டு சனிக்கிழமை வந்தது. அன்றைய தினம் மும்பை முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
ஆனால் சனிக்கிழமை தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்தது. மக்கள் மழையைப் பொருட்படுத்தாமல் ஆடல், பாடலுடன் பக்தர்கள் விநாயகர் சிலைகளை எடுத்துச்சென்றனர். மும்பையில் மிகவும் பிரபலமான லால்பாக் ராஜா விநாயகர் சிலை சனிக்கிழமை காலை மண்டபத்திலிருந்து புறப்பட்டது. வழி நெடுகிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் லால்பாக் ராஜாவைத் தரிசனம் செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத்தான் கிர்காவ் கடற்கரைக்கு வந்து சேர்ந்தது. ஆனால் அந்நேரம் கடலில் கடல் அலைகள் மிகவும் சீற்றமாக இருந்தது. அதோடு மழையும் பெய்து கொண்டிருந்தது.
கடல் சீற்றம்
காலை 11 மணிக்கு கடலில் ஹைடை எனப்படும் கடல் சீற்றம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அந்நேரத்தில் கடலுக்குள் படகில் செல்வது மிகவும் ஆபத்தானது. இதனால் கடல் சீற்றம் குறையும் வரை மண்டல் நிர்வாகிகள் காத்திருந்தனர். நேற்று இரவு 8 மணிக்குப் பிறகுதான் கடலில் சீற்றம் குறைந்தது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு லால்பாக் ராஜா படகில் ஏற்றப்பட்டு நடுக்கடல் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.
இது குறித்து லால்பாக் ராஜா கணபதி மண்டல் செயலாளர் சுதிர் சால்வி கூறுகையில், ”இரண்டு நாட்களாக மழை பெய்து கொண்டிருந்தது. அதோடு கடலில் ஹைடை விரைவில் தொடங்கிவிட்டது. இதனால் கடலில் கரைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. வழக்கமாக கடலில் லோடை இருக்கும்போது படகில் விநாயகரை ஏற்றி ஹைடை தொடங்கும்போது கடலுக்குள் கொண்டு செல்வோம். ஆனால் நாங்கள் நினைத்தது போன்று நடக்கவில்லை. இதற்கு முன்பு ஒருபோதும் இது போன்று நடந்தது கிடையாது” என்று தெரிவித்தார்.
லால்பாக் ராஜா போன்று மேலும் சில கணபதி சிலைகளை மண்டல் நிர்வாகிகள் கடலில் நிறுத்திவிட்டுச் சென்றனர். மாநகராட்சி ஊழியர்கள் பின்னர் அவற்றை கடலுக்குள் எடுத்துச்சென்று கரைத்தனர். மாநகராட்சி நிர்வாகம் இம்முறை சிலை கரைப்புக்குச் சரியாகத் திட்டமிடவில்லை என்று மண்டல் நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். மகாராஷ்டிரா முழுவதும் விநாயகர் சிலை கரைப்பின் போது ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடி வருகின்றனர்.