
அமெரிக்கா இந்தியா மீது விதித்திருக்கும் 50 சதவிகித வரி இந்திய தொழிற்துறைகளைப் பாதிப்பதைக் கண்டு வருகிறோம்.
இதே வரி அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை எப்படி பாதித்துள்ளது… அவர்களின் மனநிலை என்னவாக உள்ளது என்ற கோணத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் நியாண்டர் செல்வன். இவர் கோவையை சேர்ந்தவர் ஆவார். கடந்த 20 ஆண்டுகளாக, அமெரிக்காவில் உள்ள விஸ்கான்ஸின் மாநிலத்தில் வசித்து வருகிறார்.
“பொதுவாக, ட்ரம்பின் குடியரசு கட்சிக்கு இந்தியர்கள் இடையே ஆதரவு குறைவாக தான் இருக்கும். ஆனால், இந்த முறை குடியரசு கட்சி வரலாற்றிலேயே அதிகமாக கருப்பர்கள், ஹிஸ்பானிக்குகள், இந்தியர்கள் ஆதரவு பெற்று ஆட்சிக்கு வந்தார் ட்ரம்ப்.
ட்ரம்பின் விளம்பரம்
ட்ரம்பிற்கு இடதுசாரி மனநிலை கொண்ட இந்தியர்கள் எப்போதும் எதிர்ப்பாகத் தான் இருப்பார்கள். ‘ஹவ்டி மோடி’ போன்ற நிகழ்ச்சிகள் மூலம் வலதுசாரி இந்தியர்களின் ஆதரவை பெற்றார் ட்ரம்ப். ‘ஆப் கி பார், ட்ரம்ப் சர்க்கார்’ என விளம்பரங்களை முன்னெடுத்தார்.
ஆனால், ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர், எச்1பி விசாவுக்கு எதிராக அவரது கட்சியினர் பெருமளவில் இருந்தார்கள். ட்ரம்ப், எலான் மஸ்க் ஆகியோர் எச்1பி விசாவை ஆதரித்தப்போதும், ஆட்சியின் பல நடவடிக்கைகள் எச்1பி விசா வைத்திருப்போருக்கு எதிராக இருந்தன.
பாலஸ்தின பிரச்னைக்கு போராடிய ரஞ்சனி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பல இந்திய மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
வரி பிரச்னை
அதன்பின், வரி பிரச்னை வர, அமெரிக்காவில் வாழும் வலது, இடதுசாரி இந்தியர்கள் ட்ரம்ப் மேல் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
நோபல் பரிசுக்காக இந்தியா மேல் கடுமை காட்டுவதாக கருதுகிறார்கள். நோபல் கமிட்டி இடதுசார்பு கொண்டது என்பதால் ட்ரம்ப், மூன்றாம் உலகபோரை நிறுத்தினாலும், அவருக்கு அந்தப் பரிசு கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. இதற்காக தேவை இல்லாமல், இந்தியாவை பகைத்துக்கொண்டு, சீனா, ரஷ்யாவுடன் சேர்த்துவிட்டார் என கருதுகிறார்கள்.

மளிகை கடைகளில் வரிசையில் இந்தியர்கள்
தவிர, இந்த பொருளாதாரத் தடையால், இந்திய மளிகை கடைகளில் அரிசி, பருப்பு போன்ற இந்திய மளிகைப் பொருள்களின் விலை ஏறும் என்ற அச்சமும் உள்ளது. இந்தியர்கள் பலரும் வரிசையில் நின்று பாஸ்மதி அரிசி உள்ளிட்டவற்றை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.
இன்னும் விலை அந்த அளவிற்கு கூடவில்லை தான். ஆனால், இனிமேல் எகிறும் என்ற அச்சம் உள்ளது.
பொதுவாக, இந்த விஷயத்தில் அனைத்து தரப்பு இந்தியர்கள் மனநிலையும் ட்ரம்புக்கு எதிராகவே உள்ளது. ஆனால், பெரிதாக எந்த போராட்டமும், எதிர்ப்பு குரலும் எழவில்லை.
வழக்கமாக, ட்ரம்பை எதிர்ப்பவர்கள் தான் இதற்கும் எதிர்க்கிறார்கள். இந்தியர்கள் பொதுவாக தெருவில் இறங்கி போராடுபவர்கள் அல்ல.
தேர்தலுக்கு இன்னும் நாலு வருடங்கள் உள்ளன. அடுத்த தேர்தலில் ட்ரம்ப் நிற்கவும் முடியாது. அவரது பதவிக்காலமும் முடிவடைகிறது. அதனால், எச்1பி, மாணவர் விசாவில் இருப்பவர்கள் போராடினால் விசா பறிக்கப்படும் என்பதால் மிக அமைதியாக இருக்கிறார்கள்
அதனால் வலது, இடதுசாரி என அனைத்து இந்தியர்கள் தரப்பும், இந்தியாவிற்கு ஆதரவாகவே இருந்தாலும், பெரிதாக எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள்”.